Tuesday, March 19, 2019

ஒரு கண்ணில் சுண்ணாம்பு

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் பூசுவது கூடாது என்பார்கள்! வெண்ணெயில் மாவைக் கலந்து பிசைந்து விற்கின்ற ஆஸ்திக வெண்ணெய் வியாபாரிகள் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் கூட வெண்ணெயைக் கண்ணில் பூசிக் கொள்ள மாட்டார்கள், மனிதர்கள் நம் கடவுள்கள்தான் எதை எங்கே வேண்டுமானாலும் பூசிக்கொள்ளும்! ஊற்றிக்கொள்ளும்! வாயில் ஊற்ற வேண்டியதைத் தலையில் ஊற்றிக் கொள்ளும்! நாக்கினால் சுவைக்க வேண்டியதை மேலே பூசிக் கொள்ளும்!

பக்தர்கள் தங்களுக்குப் பிரியமானதைத் தான் கடவுளுக்குக் காணிக்கையாகத் தருகிறார்கள்! சில கடவுள்களுக்கு கள்ளும் சுருட்டும் தருகிறவர்கள் கூட இருக்கிறார்கள்! ஆதலால் மூக்குப் பொடி போடுகிற பக்தர்கள் மூக்குப்பொடி தரலாம்! முகத்தில் பவுடர் போட்டுக் கொள்கிறவர்கள் கடவுளுக்கும் (அல்லது அம்மனுக்காவது) ஒரு டின் 'குட்டிக்குரா' பவுடர் தரலாம்!

ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் பூசுவது தப்புத்தான்! வெண்ணெயையே பூசக்கூடா தென்றால் சுண்ணாம்பை மட்டும் பூசலாமா?

ஹரித்வாரத்தில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு இந்திய சர்க்கார் 36 லட்ச ரூபாய் செலவழித்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது.

"நான் ஜாதிச் சார்பற்றவன், எல்லா ஜாதிகளும் எனக்கு ஒன்றுதான்,''

என்று கூறிக்கொண்டே 5 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஜாதி மாநாட்டுக்குச் சென்றால் என்னைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?

''மதுவிலக்குக்காகவே நான் மூன்று தடவை சிறைக்குப் போயிருக்கிறேன்,''

என்று சொல்கிற ஒருவர் கள்ளுக்கடை கண்ட்ராக்ட் எடுத்தால் அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்திட்டுக் கண்ணால் மயக்குவதை எதிர்த்து நின்று முற்றுந் துறந்ததாகக் கூறுகின்ற முனி புங்கவர் ஒருவர், வேசி வீட்டில் கிருஷ்ணலீலை செய்து கொண்டிருந்தால் அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?

'மதச் சார்பற்ற சர்க்கார்' என்று பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய மூன்றிலும் வைத்துப் பாடி வருகின்ற மத்திய சர்க்கார் ஹரித்வார கும்பமேளத்திற்காக 36 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்!

வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவுக்கும், நாகூர் கந்தூரி விழாவுக்கும் இனிமேல் விகிதாசாரம் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவமாட்டார்கள், நீதி நெறி நிற்கின்ற நேரு சர்க்கார்! நிச்சயம் இது!

கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் மத்திய சர்க்காருக்கு எழுதி உடனே தங்கள் தங்கள் பண்டிகைகளுக்குப் பண உதவி பெறுமாறு நினைவூட்டுகிறேன்!

மதச்சார்பற்ற சர்க்காராகையால் நிச்சயம் கொடுப்பார்கள்! கேட்பதையும் சற்றுத் தாராளமாகக் கேளுங்கள். கருமித்தனம் வேண்டாம்! மூன்று லட்சத்திற்குக் குறையாமல் கேளுங்கள்!

புதுக்கோவில் கட்டுகிறவர்கள் கூடப் பணம் கேட்கலாம்! மதச் சார்பற்ற சர்க்காராதலால் நிச்சயம் பணம் கிடைக்கும்!

(17.4.50)

சுந்தரீ! சோமபானம் கொண்டு வாடீ!

"ஏண்டீ, உன்னைத்தானே! சுந்தரீ! வாடீ! வாடீ! ஒரு டம்ளர் பானம் கொடு! அப்படியே எனக்கு ஒரு முத்தமும் கொடு!''

''சே! நீங்களொரு வெட்கங்கெட்ட மனுஷர்! 20 வயசுப் பெண்ணு கேட்டுண்டிருக்கே என்கிறதுகூடத் தெரியாமே, இப்படி யாரானும் பேத்துவாளோ! என்ன வேணும்? காப்பியா? பால்காரன் வரலையே!"

"காப்பியா! அது ஏண்டீ இப்போ? அதிலே போதையே இருக்கிறதில்லையே! ஒரு டம்ளர் சோம பானம் கொண் டாடீ!" என்று கேட்டார் வவுத்துநாத சர்மா!

"சோமபானமா? இதோ கொண்டவர்றேன். அது சரி! என்ன இவ்வளவு ஆனந்தமாயிருக்கேள்? ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைக்கப்பேறதோ?" என்று கேட்டாள், சர்மாவின் தர்மபத்தினியான துரோபதாபாய்!

''ஹைகோட் ஜட்ஜா? அது தானே கிடைக்கப்பெறாது! அதற்கு முன்னாடி எது செய்யணுமோ அதை செஞ்சு முடிச்சேன். அப்படி! இந்த ஒரு மாசமா என்ன கஷ்டம்? எவ்வளவு சிரமம்? னோக்கு என்னடீ தெரயும்? எத்தனை தடவை மெட்ராசுக்குப் போறது? எத்தனை தடவை ட்ரங்க்போனில் பேசறது? நம்பளவாளா இருந்தால் எல்லாம் ஒரே பேச்சில் முடிஞ்சு போயிருக்கும். இந்த சூத்திரன்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போய் என்ன கஷ்டமாயிருக்கு போ!''

"சொல்லித் தொலையுங்களேன்! தொண தொணன்னு 'கோர்ட்டி'லே பேசறமாதிரிப் பேசறேளே!''

"அதுதான் சொல்லப் போறேனடி! இந்தக் கருஞ் சட்டைக்காரன்கள் இருக்கான்களோன்னோ! ராமசாமி நாய்க்கன் கூட்டம்! அவன்கள் கொட்டத்தை அடக்கிப் பிட்டேன்!''

"ஓஹோ! அவா பந்தலைக்கூடக் கொளுத்த ஏற்பாடு செஞ்சேளே! அவன்கள்தானே! ரொம்ப சந்தோஷம்! நான்கூட இன்னிக்கு சோமபானம் சாப்பிட்டுப் பார்க்கப் போறேன். எப்படி அடக்கினேள்? பெரிய கூட்டமாச்சே, அவன்கள்! கிராமம் தவறாமல் ஆயிரக்கணக்கில் இருக்கிறான்களே! ரொம்ப செல்வாக்காச்சே அவன்களுக்கு? நீங்கள்தான் செய்தேன் என்று அவன்களுக்குத் தெரியுமோ ?''

"போடீ பித்துக்கொள்ளி! எனக்கா தெரியாது? எதை எப்படிச் செய்யவேண்டுமோ, அப்படிச் செய்வேண்டீ! ஸ்ரீராமபிரான் சுக்ரீவன் உதவியைக் கொண்டுதானே அவன் சகோதரனான வாலியைக் கொன்றார்? விபீஷ்ணர் உதவியைக் கொண்டுதானே அவன் சகோதரனான ராவணனை கொன்றார்? அதேமுறையைத்தான் நானும் கையாண்டேன்.”

"இந்தக்காலத்தில் அந்த மாதிரிப் பேர்வழிகள் எப்படிக் கிடைத்தார்கள், உங்களுக்கு?"

"இந்தக்காலம் வேறே, அந்தக் காலம் வேறேயோ! எல்லாம் ஒண்ணுதாண்டீ! ஓமாந்தூர் ரெட்டியிருக்கிறா ரோன்னோ, அவரைப் பிடிச்சு மிரட்டித்தான் உத்தரவு போடச்சொன்னேன்! சும்மா சொல்லப்படாது! பயந்த மனுஷன்! நம்பௗவாகிட்டே ஒரு தனிவாஞ்சை. பக்திகூட! நம் "மந்தி" பத்திரிகை கூனிவாசன் இருக்காரோன்னோ, அபார வேலை செய்திருக்கார்! இந்த மந்திரிகள் காதைப் பிடிச்சு நன்னா; அழுத்தித்திருகி ஒரு உழக்கு ரெத்தம் எடுத்துட்டார். அதுகளெல்லாம் அவரைக் கண்டால் நடுங்கிச் சாகிறதுகள்!''

"சரி! அடுத்தபடி என்ன செய்யப்போறேள்? அந்த ஈரோட்டுப் பேர்வழி காந்தி மாதிரி ஏதேனும், முரட்டுத்தனமாக எதிர்க்க ஆரம்பிச்சுட்டா என்ன செய்யறது?”

"ஆமாண்டி! அவர் ஒரு மாதிரி ஆசாமிதான்! எந்தச் சமயத்தில் என்ன செய்வார் என்பதே தெரியாதுடீ! அந்த ஒரு ஆள் மட்டும் இல்லாட்டீ! அடாடா! பாக்க சூத்திரப் பெரிய மனுஷாளையெல்லாம் ஒரு நிமிஷத்திலே ஏமாற்றிப்பிடலாமே! நம்பளவா பத்திரிகையிலே நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே அவன்களிலே பாதித் தலைவன்களுக்கு உச்சி குளிர்ந்து போகுமே! அப்புறம் செத்த நாய் செருப்பைக் கடிச்சமாதிரி வெறுமனே கிடக்குங்கள்! ஆனால் இந்த மனுஷன்தான் எதிலும் ஏமாற மாட்டான்.

"அப்படீன்னா என்ன செய்யப்போறேள்?''

"அதெல்லாம் நேக்குத் தெரியுண்டீ! அவளுக்குள்ளேயே நேருக்கு நேர் முட்டிக்கொள்ற மாதிரி ஒரு வேலை செய்து வெச்சிருக்கேன். அது பலிச்சுடுத்தோ, அப்புறம் நம்ப ராஜ்யந்தான்."

''அரு சரி! இந்த தந்திரத்தைக் கண்டு பிடிச்சிண்டு அவாள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டா, அப்புறம் நம்ம கதி?."

''அதுதானே சேரமாட்டான்கள்! அவன்களுக்கு அந்தப் புத்தியிருந்தால் இந்த நாட்டிலேயே நம்பளை நுழைய விட்டிருப்பான்களோ? போடீ! பைத்தியக்காரி! அவன்களை ஒண்ணு சேரவிடுவோமா நாம்? அதுதானேடீ நம்ப காயத்ரீ! நித்ய ஜெபம்! "பிரித்துவை! பிரித்துவை! பிரித்துவை!'' இந்த மூலமந்திரத்தைப் பிராமணன் என்றைக்கு மறக்கிறானோ, அன்றே அவன் வெளியே வேண்டியதுதான்... அது சரி! சோமபானம் எங்கேடி? என் சொகுசு சுந்தரி கொண்டுவாடீ, சீக்கிரம்"!

ஆ.வி. அம்மாமியும் க.கி. கோமளமும்!

“வாருங்கோ, அம்மாமி! சௌக்கியம்தானே! என்ன சாவகாசமா காலை நீட்டிப்போட்டுண்டு ஏதோ மென்னுண்டு இருக்கேளே! எனக்குக் கொஞ்சம் தாங்களேன்!'' 

"வாடியம்மா கோமளம்! வயசாயிடுத்துன்னா காலே நீட்டிப்போட வேண்டியதானேடீ! ஒன்னாட்டம் நானென்ன, சிறுபெண்ணா! சரி உங்க ஆத்திலே என்ன ஒரே கும்மாளமா இருந்தது. மத்தியானம்? உன் தங்கை புஷ்பவதியாகியிருக்காளோ!'' 

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, அம்மாமி! அவள் புஷ்பவதியாகி எத்தனையோ மாசம் ஆயிடுத்தே! எங்கம்மா ஒரு வைதீகக் குடுக்கையோன்னோ! கல்யாணம் பண்றதுக்கு முன்னே புஷ்பவதியாயிட்டாளம்! அடுத்த பங்குனியில் கல்யாணத்தை முடிச்சுப்பிட்டு அதற்கப்புறம் புஷ்பவதியான தாட்டமா வெளிச்சிக்கலாம்; அது வரையிலே வெளியே சொல்ல வேண்டாம்; என்று பிடிவாதம் பிடிச்சாள், அவள் இஷ்டப்படியே விட்டுட்டோம், நீங்கள் கூட மனசிலே போட்டு வையுங்கோ! இந்தக் காலத்திலே கூட நம்பவாளிலே சில வைதீகப் பிச்சுக்கள் இருக்கே! என்ன பண்ணித் தொலையுறது?'
 
''அப்படியா கோமளம்! நன்னா சொன்னே போ! நான் யாரண்டே சொல்லப்போறேன்! ஆமாம்! வேறென்ன விசேஷம் உங்க ஆத்திலே?"
 
"காலையிலே பேப்பரைப் பார்த்தோம். நமக்கெல்லாம் ஒரு சந்தோஷமான சேதி வந்திருக்கு, அம்மாமி!'' 

''இனி என்ன சந்தோஷம் கிடக்கு, நம்பளுவாளுக்கு! அதுதான் பிராமணனுக்கு வேலையோ, படிப்போ கிடையாதுண்ணு செய்து விட்டான்களே, இந்த காங்கிரஸ் ராஜ்யத்திலே! காங்கிரஸ் - காங்கிரசுண்ணு தொண்டையைக் கிழிச்சுண்டு கத்தினாளே! நம்பகிட்டு ஒருவருஷமா அலையா அலைஞ்சான். சர்க்கார் வேலையே கிடைக்கலே! தலையிலெழுத்து, பாவம்! பஸ் கண்டக்டராயிருக்கானாம். சேலத்திலே! பி.ஏ. பாஸ் பண்ணிட்டு பஸ் கண்டக்டராண்டீ! அதைச் சொல்லிக்க வெட்கப்பட்டுண்டு எட்டாவது வரைக்கும் படிச்சதாச் சொல்லுண்டிருக்கானாம்! என்ன சுயராஜ்யம்வேண்டீருக்கு! மண்ணாங்கட்டி ராஜ்யம்!"

"அதுதான் அம்மாமி நல்ல சேதி வந்திருக்குண்ணு சொன்னேன்! நீங்க இப்போ சொன்னேளே! இந்த அக்கிரமத்துக்குக் காரணமாயிருந்தவன் ஒழிஞ்சு போயிட்டான்களாம்!'' 

"அப்படியா கோமளம்! ரொம்ப சந்தோஷம்! யார் ஒழிஞ்சிபோயிட்டா? ராஜகோபாலச்சாரியாரா?"
 
"அய்யய்யோ! அபசாரம் அபசாரம்! வாயிலே போட்டுக்குங்கோ அம்மாமி! அவர்தானே நம்மையெல்லாம் காப்பாற்றுகிறவர்! கலிகால் மகாவிஷ்ணுவோன்னோ , அவர்! அவரும் நெருக்கியும் கோபால்சாமி அய்யங்காரும் இல்லாட்டிப்போனா நம்பளவா சர்க்கார் ஆபீஸ் பக்கமே எட்டிக்கூடப் பார்க்க முடியாது அம்மாமி!'' 

"னேக்கு இந்த எழவெல்லாம் என்ன தெரியறது? ஏதோ கிருஷ்ணா - ராமான்னு காலத்தைக் கழிச்சூண்டிருக்கேன்! யார் ஒழிஞ்சு போயிட்டாண்ணு சொல்றே!?''
 
"சொல்றேன், கேளு அம்மாமி! ஓமந்தூர் ரெட்டீன்னு ஒருத்தன், அவினாசிலிங்கம் செட்டீன்னு ஒருத்தன், இவன்க ரெண்டுபேரும், அடாடா! நம்பளவாளைப் படுத்தின பாடு உண்டே! சர்க்கார் உத்தியோகத்திலேயெல்லாம் அதிகமான சூத்திராளையே போட்டான் அந்த ரெட்டி! கோவில் சொத்துகளைப் படிப்புக்கும் ஆஸ் பத்திரிக்கும் செலவு செய்யணுமின்னு சொன்னான், இன்னொரு ஆசாமி என்ன செய்தான் தெரியுமோன்னோ! காலேஜ்களிலே நம்ப பையன்களுக்கு இடமில்லாமல் பண்ணீட்டான். ஸ்கூல்களிலெல்லாம் குறள் படிக்கணுமாம், குறள்! ஒரு கீதை, ஒரு வேதம், இவைகளைப் படிக்கலாமே குறளாம்! குறள்! இந்தச் சனியனை நம்பளவாளிலே யாரானும் படிப்பாளோ? இதைக் கட்டாயமாய்ப் படிக்கணும்மின்னு சொன்னான்! என்ன ஆச்சு தெரியுமோ? இந்த இரண்டு பேருக்கும் மந்திரி வேலை போச்சு! போச்சு, அம்மாமி, போச்சு! போயே போயிடுத்து!" 

''அப்படியாடி கோமளம்! என் வயிற்றிலே பாலை வார்த்தேடீ இவ்வளவு அநியாயக்காரர்களுக்கு வேலை போகாமே என்ன செய்யும்! பிரமணாருக்குத் தீங்கு செய்தவாள் உருப்படியாகியதாக எங்கேயானும் படிச்சிருக்கியோ! மகாத்மா காந்தியைக் கூட நம்பளவன் தானே சுட்டுக் கொன்றானாம்! பாவம்!''
 
"பாவமா! என்ன அம்மாமி, பாவம்,..... கிடக்கு! இந்த ரெட்டியார் இன்னிக்கே தன் சொந்த கிராமத்திற்குப் போறாராம்! பேப்பர்லே போட்டிருக்கா! செட்டியாரும் இந்த வாரத்திலேயே தன் ஊருக்குப் போயிடுவார்! இதைவிட நல்ல சேதி நமக்கு வேறென்ன அம்மாமி வேணும்? அதுக்காகத்தான் இன்னிக்கு வடை பாயசத்தோட விருந்து சாப்பிட்டோம்! ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு, போன வருஷம் 31 ந்தேதி யன்னைக்குத்தான் இந்த மாதிரி விருந்து சாப்பிட் டோம்! அதற்கப்புறம் இன்னைக்குத்தான்! உங்க ஆத்துக்குக்கூட லட்டும், பாயாசமும் அனுப்பிச்சேனே! சாப்பிட்டேளோ! நம்மைப் பிடிச்ச பீடைகள் ஒழிஞ்சுது அம்மாமி இனிமேல் யார் மந்திரியா வந்தாலும் பரவாயில்லே! நாம் சொன்னபடி கேட்குங்கள்! இரண்டு காக்காயைக் கொன்னு ஒரு குச்சியிலே கட்டி வச்சுபிட்டா அதற்கப்புறம் நெல்லைத் திங்க காக்காய் வருமா அம்மாமி! இந்த காக்காய் கூட்டத்துக்கு இப்படி தான் புத்தி கற்பிக்கணும்! மவுன்ரோடிலேயும், மயிலாப்பூரிலேயும் இருக்கிற நம்ப பெரியவாளெல்லாம் தீர்க்காயுசா இருக்கணும்!''
 
6.9.1949 'விடுதலை'

பூசுரர் இனமில்லையே!

"அரசியல் நிர்ணயசபைக்கு வேறு சில நிபுணர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஆலோசனை கூறும் விதத்தில், காங்கிரஸ் பத்திரிகையொன்றில் வந்துள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

''சென்னை சட்டசபை அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்போகும் 49 பெயர்களில் காங்கிரஸ் அல்லாத கீழ்க்கண்டவர்கள் பெயர்களைப் பற்றியும் கவனிக்க வேண்டும். டாக்டர் லட்சுமணசாமி முதலியார்; பி. ராமச்சந்திர ரெட்டி; ஸர். ஆர்.கே. ஷண்முகஞ்செட்டி; ஸர். எ. இராமசாமி முதலியார். தகுதியைப் பொருத்தமட்டில் இவர்களும் சேர்க்கப்படுவது நல்லது''.

இதை எழுதிய பேர்வழி சுத்தம் கர்நாடகம் போலிருக்கிறதே! 'தகுதி'யாமே தகுதி! பசங்களைப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதில் "தகுதி" அவசியம் என்றால், பூணூல் பசங்களுக்கு 'லக்' அடிக்கும்! அதற்காகச் சொன்ன தகுதியை இதில் போட்டுக் குழப்புகிறாரே!

300 பேர்களுக்குமேல் இருக்கும் அரசியல் நிர்ணய சபையில் இதுகளையெல்லாம் விட்டால் தலைக்குத்தலை ‘நொச்’  ‘நொச்’ சென்று ஏதாவது பேசிக்கொண்டேயிருக்குமே! இதுகள் உலகத்திலே பார்த்ததையும் கேட்டதையும், தினம் 10 புஸ்தகத்திலே படித்ததையும் அங்கே சொல்லித் தொலைக்குமே! 385 பேரில் 380 பேருக்கு ஒரு சனியனும் புரியாதே!

தொலைஞ்சாலும் தொலையட்டும்; ஒண்ணு ரெண்டைப் போட்டு வைக்கலாமென்றால், ஒண்ணுகூடப் பூணூல் போடலையே! அதுமட்டுமா? அரசியல் நிர்ணய சபையில் 385 பேர் உட்கார்ந்திருக்கும்போது, பண்டிட் நேரு எழுந்து பிரசங்கமாரி பொழிந்து விட்டு உட்கார்ந்ததும் அவர் பேசியது சரியோ, தப்போ, எல்லோரும் கை தூக்க வேண்டுமே, ஒரே சமயத்தில்! முன்னேயும் பின்னேயுமாகத் தூக்கினால் தவறு செய்தவர் காந்தியாரின் "ராம் துன்" பஜனைக்கு ஒரு மாதம் போய் ஒரே நேரத்தில் தாளம் போட்டுப் பழக வேண்டும்! இந்த நிபந்தனைக்கு உட்பட்ட ஆசாமிகளாகப் பொறுக்கியெடுத்தால் நல்லதா? அதை விட்டு அந்தராத்மாவின் பெருமையைப் பேச வேண்டியவர்கள் கூடிய இடத்தில்; அரசியல் சிக்கல்களைப் பேசித் தொலைக்குங்கள், இதுகள்!

இந்த 5-6 பேர்களைப் போட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். 385ல் பாக்கி எத்தனை? ஒரு தொட்டி உப்புத் தண்ணீரில் 6 சொட்டுத் தேன் விட்டால் தண்ணீர் முழுதும் இனிக்கப் போகிறதா, என்ன?

Friday, March 15, 2019

ஜோதியில் கலந்தார் காந்தி!

"அவர் செத்துப்போனார்" என்று சொல்வதோ, எழுதுவதோ மங்களகரமாயில்லை என்று சொல்வார்கள்! செத்துப்போவதில் 'மங்களகரம்' எப்படியிருக்குமோ எனக்குத் தெரியாது! சாவு வீட்டில் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கலாமல்லவா? "அவர் சிவலோக ப்ராப்தியடைந்தார்" "இவர் இறைவன் திருவடி நீழலிற் சேர்ந்தார்'', "அவர் திருமால் திருவடியிற் கலந்தார்'', "இவர் துஞ்சினார்", "அவர் இறுதியான தூக்கத் திலாழ்ந்தார்''.
இப்படியெல்லாம் இறந்தவரைப் பற்றி  மங்களகரமாகச் சொல்வதுதான் சிறந்தது என்கிறார்கள்!

கள்ள மார்க்கெட் வியாபாரத்தில் ஊர்க் கொள்ளையடித்து, பலர் பணத்தைச் சுரண்டிப் பெரும் பணக்காரனாகி, உல்லாச வாழ்வு வாழ்ந்துவிட்டு உயிர் நீத்த ஒருவனை "இறைவனை திருவடி சேர்ந்தார்" என்றால், அது உண்மையா? அவர்கள் நம்பிக்கைப்படியே கூறுவதானால், ராம.சோம.பெரி.அழ.முருகு.கரு. காருண்ய செட்டியார் பங்குனி மாதம் 15-ந் தேதியன்று காலை 7 மணிக்கு திடீரென்று நரகக்குழியில் வீழ்ந்துவிட்டார்' என்றல்லவா எழுத வேண்டும்? (எந்த மதத்துக்காரரானாலும் இப்படித்தானே எழுதவேண்டும்? கள்ள மார்க்கெட்காரருக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை லாப காரர்களுக்கும் இறைவன் திருவடியில் இடங் கிடைப்பதென்றால், அந்த இடம் சென்னை ட்ராம் கார்களை விட அதிக நெருக்கடியாகவல்லவோ இருக்க வேண்டும்? இறைவனும் (காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத்தைப் போல) கள்ள மார்க்கெட்காரர்களுக்கு அபயம் தருகிறார் என்றல்லவா ஏற்பட்டுவிடும்?

இறந்து போனவர்கள் இறைவன் திருவடிக்கே நேராகப் போனாலுஞ்சரி, அல்லது போகிற பாதையில் நரகத்தில், (அதாவது தென் இந்திய ரயில்வே மூன்றாம் வகுப்பு வண்டியில்) கொஞ்ச நேரம் தங்கியிருந்து விட்டுப் போனாலுஞ்சரி! அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை! ஆனால் இறந்தவர் எப்படியிறந்தார் என்பதை மறைக்கவே கூடாது!

ஒருவர் குளத்தில் வழுக்கி விழுந்து இறந்து போயிருக்கலாம். இன்னொருவர் வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கலாம். மற்றொருவர் இந்தத் காலத்து டாக்டர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டாண்டியாகி, அதைவிட இறந்து போவதே நல்லது என்று நினைத்து, தன் சந்ததியார்கள் நன்மையைக் கருதி செத்துப் போயிருக்கலாம்! எப்படியானாலுஞ்சரி, மரணத்தின் காரணத்தை மறைப் பானேன்?

ஆனால் நம் கல்வியமைச்சர் அவர்கள் இதில் கருத்து மாறுபாடு கொண்டவராய்த் தெரிகிறது! இவர் சென்னை முத்தையா செட்டி பெண் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தாராம். ஒரு வகுப்பில் அன்றாடச் செய்திகளைத் தொகுத்து எழுதியிருந்தார்களாம். அவைகளில் ஒன்று, "காந்திஜி கொலை வழக்கு" என்பது பற்றியதாம். இதைக் கண்டாராம், கல்வி அமைச்சர். உடனே திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் வாய்மை என்பது பற்றிய குறளடிகள் நினைவுக்கு வந்தன போலும்!

"காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார் என்பதையே நாம் மறந்துவிட வேண்டும்; அதை யாருக்கும் கற்பிக்கக்கூடாது" என்று கூறினாராம்!

ஏனய்யா மறந்துவிடவேண்டும்? கல்விக்கரையைக் கண்ட அமைச்சர் அவர்களே, ஏன்? பிரிட்டிஷ் மன்னன் முதலாவது சார்லஸ் என்பவன் ஜனநாயகத்தினால் தூக்கிலிடப்பட்டான் என்பதை மறந்துவிட்டதா உலகம்?
சாக்ரட்டீசுக்கு நஞ்சு தந்து கொன்றார்கள், கிரீஸ் நாட்டுக் கயவர்கள், என்பதை மறந்து விட்டதா, உலகம்? அப்ரஹாம் லிங்கன் துரோகி ஒருவனால் கொல்லப்பட்டான் என்பதை மறந்து விட்டதா, உலகம்? சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் மேலிடத்தின் துரோகச் செயலால் நாட்டை விட்டு ஓடி, எங்கேயோ அநாதியாக மாண்டார் என்பதை மறந்து விட்டதா, உலகம்? ஹிட்லர் எதிரியிடம் கைதியாயிருப்பதைக் காட்டிலும் இறப்பதே நல்லது என்ற முடிவால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மறந்து விட்டதா, உலகம்?
காந்தியாரை கோட்ஸே என்ற பார்ப்பனன் மதவெறி காரணமாகக் கொன்று விட்டான், என்பதை நாம் ஏன் மறக்கவேண்டும்? அந்த மதத்தில் பிறந்திருக்கும் அவமானத்திற்காகவா? அதற்காக உண்மையை மறைக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!

இப்போதேதான் அநேகமாக எல்லோருமே மறந்து விட்டார்களே! கோழி திருடிகளும் கூடக் குலாவி, கோரமான அந்தப் படுகொலையை அடியோடு மறக்குமாறு செய்து, சாம்பல் கரைப்பு விழாவும் செய்துவிட்டார்களே!

இனி, அடுத்தபடி காந்தி புராணம் எழுத வேண்டியது தானே பாக்கி. அதில் இராமலிங்க அடிகள் நடராஜ ஜோதியில் கலந்தது போலவும்,

"காந்தியார் ஜோதியில் கலந்துவிட்டார்! இறைவனே கோட்ஸே உருவத்தில் வந்து அவரது அபார சேவையை மெச்சி, தம் பாதார விந்தத்துக்கு அழைத்துச் சென்றார்" 

என்று எழுதவேண்டிய ஒன்றுதானே பாக்கி! 1948-ல் நடந்த சம்பவத்திலேயே இவ்வளவு பித்தலாட்டாம் என்றால், பண்டை நாட்களில் அசுரர்களைப் பற்றி கூறியிருப்பதெல்லாம் எவ்வளவு தூரம் "காங்கிரசா"யிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்!