Monday, September 20, 2010

நமது நாடு!

உலகமெல்லாம் சமூக சீர்திருத்தமும், அபேதவாதமும், சமதர்மமும், சம சொத்துரிமையுமான துறைகளில் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது நமது நாட்டில், வருணாசிரம தர்ம மகாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலகமெல்லாம் சந்திரமண்டலத்துக்குப் போய் வரவும், ஆகாயத்தில் பறக்கவும், மணிக்கு 100, 200, 300 மைல் வேகம் போகவும், பேசும் இயந்திரங்களை உண்டாக்கவும், மழையை வருவிக்கவும், ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவனைப் பிழைக்க வைக்கவும், அய்யாயிரம் பத்தாயிரம் மையிலுக்கப்பால் நடப்பதையும் பேசுவதையும் காணவும் கேட்கவும் செய்யவும் மற்றும் இது போன்ற அற்புதங்களிலும் ஆராய்ச்சிகளிலும் புத்தி செலுத்திக் கொண்டிருக்கும்போது, நமது நாட்டில்,

இந்தக்குளத்தில் ''பறையன்'' தண்ணீர் மொள்ளலாமா?

இந்தக் கோவிலுக்குள் நாடார் போகலாமா?

இந்தப் பள்ளிக் கூடத்தில் நாயக்கர் படிக்கலாமா? என்கிற விவாதமும்

சூரியனுக்கு 8 குதிரையா? 16 குதிரையா?

தீபாவளி புரட்டாசி மாதத்திலா? அப்பசி மாதத்திலா?

சாமிக்கு நெற்றியில் நாமம் வடகலையா? தென்கலையா?

விபூதியைக் குழைத்துப் பூசுவதா? அப்படியே அடித்துக் கொள்ளுவதா?

சீதையை ராவணன் தலைமயிரைப் பிடித்துத் தூக்கிக் கொண்டுபோனானா? தரையோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனானா?

சுவாமிக்கு தாசி வேண்டுமா? வேண்டாமா?

பெண்களை 12 வயதில் படுக்கை வீடு கூட்டலாமா இல்லை 16 வயதில் கூட்டலாமா?

எந்தப் புராணம் பொய்யான புராணம்? எந்தப் புராணம் நிஜமான புராணம்?

எந்தப் பாட்டு பழைய பாட்டு? எந்தப் பாட்டு இடைச் செருகல்?


சமணர்களைக் கழுவேற்றினதற்கு அகச்சான்று புறச்சான்று இருக்கின்றதா? என்கின்ற ஆராய்ச்சியே மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுவதோடு இன்னமும் முடிவுபெற்றதாகவும் தெரியவில்லை!

Sunday, September 19, 2010

கை வெட்டிகள்!

திருநெல்வேலி மாவட்டம் கப்பிக்குளம் என்ற கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் படித்த வள்ளியம்மாள் என்ற 13-வயது மாணவியை அடித்து விட்டாராம், பள்ளி ஆசிரியர். அதைத் தன் தந்தையிடம் கூறிவிட்டாளாம், சிறுமி. ஆசிரியர் அடித்தாலும் வதைத்தாலும் சும்மாயிருக்க வேண்டுமே தவிர, வீட்டில் எப்படிச் சொல்லலாம். ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அடுத்த தண்டனையிலிறங்கினார். அதாவது சிறுமியின் கையை வெட்டிவிட்டாராம், தலைமை ஆசிரியரான கோவில் பிள்ளை! அந்தக் காலமாயிருந்தால் குருவுக்குக் காணிக்கையாக கையை வெட்டி எடுத்துக் கொண்டார் என்று சும்மாயிருந்திருப்பார்கள்!

துரோணாச்சாரி என்ற பார்ப்பனன் அப்படித்தானே செய்தான்? தம்மிடம் நேராகப் படிக்காமல் வில்வித்தை கற்றுக் கொண்டதற்காக, (தன் சீடன் அர்ச்சுனனுக்கு ஆதரவாக) ஏகலைவன் என்ற வேடனின் வலது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார், பரம யோக்கியரான துரோணாச்சாரி!

இது கலியுகமல்லவா? மேற்படி கைவெட்டி வாத்தியார் மீது வழக்குத் தொடரப்பட்டதாம். 5 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாம்!

பள்ளி ஆசிரியர்களில் பலவிதமுண்டு
'எவனோ எப்படியோ தொலையட்டும்! நமக்கென்ன? நாளை எண்ணிக்கொண்டு முதல் தேதியன்று(சில பள்ளிக்கூடங்களில் 2-3 மாதம் கழித்துத்தான் சிறிது சிறிதாகக் கிடைக்கும்!) சம்பளத்தை வாங்கிப் போவோம்!' என்றிருப்பவர்கள் ஒரு ரகம்

'நல்லாசிரியர் என்று பெயர் எடுக்க வேண்டும்; நம்மிடம் படிக்கின்ற பிள்ளைகள் திறமைசாலிகளாகவும், ஒழுக்க சீலர்களாகவும் வளர்ந்து, அவர்கள் ஆயுள் முழுவதும் நம்மை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று பணியாற்றுகிறவர்கள் ஒரு ரகம். 

(என்னிடமிருக்கின்ற நல்லகுணம், இலக்கிய ஆர்வம், திறமை - ஆகியவை ஏதாவதிருந்தால், இவையெல்லாம் என் ஆசிரியர்களைச் சேர்ந்தவை என்றுதான் நான் இன்னும் கருதிக் கொண்டிருக்கிறேன்). இந்த ரகம் கொஞ்சம் அபூர்வம்!

இனி மூன்றாவது ரகம் ஒன்றிருக்கிறது! இதுதான் மேற்படி கோவில் பிள்ளை ரகத்தைச் சேர்ந்ததுபாடஞ்சொல்லிக் கொடுப்பது முன்பின் இருந்தாலும் மாணவ-மாணவிகளை மாட்டையடிப்பது போல் அடிப்பார்கள்! இவர்கள் எருமை மேய்க்க வேண்டியவர்கள். தவறிப்போய் இந்த வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

ஒரு சிறுவன் காலில் அடிபட்டுப் பெரிதாக வீங்கியிருந்தபோது, அதைக் காட்டி கெஞ்சியுங்கூட, அவன் பள்ளியிலுள்ள தமிழாசிரியர் அதைப் பொருட்படாத்தாமல் வேண்டுமென்றே ஒரு மணி நேரம் வரையில் அவனை நிற்க வைத்தே படிக்கச் சொன்னாராம்! மற்றொரு ஆசிரியர் ஒரு சிறுவனின் காதைப் பிடித்துத் திருகியதால் மூன்றுநாள் வரையில் வலி தாங்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக அவன் தாயார் என்னிடம் கூறினார்.

மனித இதயம் படைக்காத சிலர் பள்ளி ஆசிரியர்களாக வந்து விடுவதனால்தான் இந்தத் தொல்லை! இங்கிலாந்திலுங்கூட சில சமயங்களில் ஆசிரியர்கள் பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து விடுகிறார்களென்றும், ஆனால் ரஷ்யாவில் மட்டும் இந்தக் காரியம் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறதென்றும், சென்ற ஆண்டில் வெளியான ரஷ்யக் கல்வி முறை பற்றிய ஒரு நூலில் படித்தேன்.

மேற்படி கொவில் பிள்ளையைப் போன்ற பள்ளி ஆசிரியர்கள் கசாப்புக் கடை வைக்க வேண்டியவர்கள்! அல்லது ஆடு-மாடு வெட்டுகின்ற(Slaughter house) இடத்தில் வேலை செய்ய வேண்டியவர்கள்! ஒருக்கால் உயிர்ப்பலி தடைச்சட்டம் வருவதற்கு முன்பு இவர் அய்யனார் கோவில் பூசாரியாயிருந்தாரோ என்னவோ? ஆனால் கிருஸ்துவப் பெயர் மாதிரியிருக்கிறதே! பாவம்! ஒரு ஆதித்திராவிடச் சிறுமியின் கையை வெட்டியிருக்கிறார், ஈவு இரக்கமில்லாமல்!

நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்கும், ஒழுக்க சீலமுடைய மாணவர்களுக்கும் பள்ளியில் பரிசு வழங்கப்படுவதுபோல், பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்பது என் ஆசை! எப்படியென்றால் - அடிக்காமலோ, கிள்ளாமலோ, கொடுமைப்படுத்தாமலோ திறமையாகக் கற்பிக்கக் கூடிய பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு ஒரு தங்க மெடல் தர வேண்டும்! அந்த மெடலில் 'இவர் மனிதப் பிறவி' என்று செதுக்கியிருக்க வேண்டும்! 

*******

- இக்கட்டுரை 01-09-1952 ல் வெளியானது.
-நன்றி, 
தோற்பதே நல்லது(புத்தகம்),
பொன்னி பதிப்பகம், 
மடிப்பாக்கம், சென்னை-91. 

Saturday, September 18, 2010

எழுத்து வேந்தர் பேரறிஞர் குத்தூசி குருசாமி, பி.ஏ. அவர்களின் மரணக் குறிப்பு!

எழுத்து வேந்தர் பேரறிஞர் குத்தூசி குருசாமி, பி.. அவர்களின் மரணக் குறிப்பு

இந்த ஆள் பிறந்த நாள் 1906-ம் ஆண்டு ஏப்ரல் 23ந்தேதி. மறைந்த நாள் 1969-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி. அதாவது 12 நாள் குறைய 63 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.
இந்த மரணக் குறிப்புக் கல்லை இங்கு நாங்கள் நாட்டியிருப்பதன் நோக்கம், இந்த ஆளை நாங்கள் மதிக்கிறோம் என்பது அல்ல. இந்த ஆள் ஒரு அபாய அறிவிப்பு. இந்த ஆளைப் போல யாரும் முட்டாளாக வாழக் கூடாது என்பதைத் தமிழர்களுக்கு எடுத்துக் காட்டவேயாகும்.

இவன் வாழத் தெரியாத பழங்காலப் பட்டதாரி! சிலர் இவனை 'அறிவாளி' என்று கூறலாம்! ஆனால் உலகமறிந்த பெரும்பாலோர் 'ஏமாளி' என்றே கூறுகின்றனர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வரக்கூடிய சர்க்கார் பணியை உதறிவிட்டு வந்தான். எத்தனையோ கோடீஸ்வரர்களை அண்டிப் பிழைக்கும் திறமையிருந்தும் அந்த நல்ல வழியையும் புறக்கணித்த முட்டாள்!
துறவிக்கோலம் பூண்டிருந்தாலும் இவனை மன்னிப்பார்கள் உலகத்தார்! இல்லறத்தையல்லவா ஏற்றிருந்தான் இவன். உற்றார் உறவினரையும் பகைத்துக் கொண்டான். தன் திருமணத்தின் மூலமாக சொந்தத்திலும் சொத்தில்லை, திருமணத்திலும் சொத்து சேரவில்லை. ஆகவே ஏழையாகப் பிறந்து, ஏதோ சிறிது சேர்த்து இரு குழந்தைகளைப் படிக்க வைத்து, ஏழையர்க்கு உதவி, இறுதியில் ஏழையாகவே மடிந்து, இங்கே எங்கள் சொந்தச் செலவில் புதைக்கப்பட்டிருக்கிறான்.

ஏமாந்தான்!
இவனை நேர்மை வழியில் நடக்கச் சொன்னது யார்? யதார்த்தவாதியாயிருந்தான், எனவே வெகுஜன விரோதியாகவே மாண்டான். தன்னைப்போலவே பிறரும் இருக்க வேண்டும் என்ற பகற்கனவு கண்டான், ஏமாந்தான்வாழ்க்கைத் தோல்விக்கு இவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! காக்காய் பிடிக்கத் தெரியாத மண்டுக்களில் முதல் நம்பர் ஆள்! ஆனாலும் இவனுக்கு எதிலும் மரணத்துணிச்சலுண்டு என்று சிலர் புகழ்ந்து கூறலாம்.

இவன்
உலகப் போக்கை அறியாத பன்னாடைகளின் கூற்றல்லவா இது? குறையுடைய தோழர்களையெல்லாம் எதிர்த்தே தீரவேண்டும். கண்டித்தே ஆகவேண்டும்! என்றால் இவன் மனித இனத்திலேயே பிறந்திருக்கக் கூடாதே! குற்றமில்லையா, விலங்கினத்தில் அல்லவா பிறந்திருக்க வேண்டும்? இவனிடத்தில் மட்டும் குறையே இல்லையா? குற்றமில்லையா? இவற்றைப் பிறர் சகித்துக் கொள்வதில்லையா? அப்படித்தானே இவனும் நடந்திருக்க வேண்டும்?

பணத்துக்கோ, புகழுக்கோ, பதவிக்கோ ஆசைப்படுவதில்லை என்பதே இவனது பிற்போக்குக்கும் மடமைக்கும் ஒரு எடுத்துக்காட்டல்லவா?
காட்டிலுள்ள பறவை விலங்குகளுக்குக் கூடத்தான் இவற்றில் ஆசையில்லை! இவனை அவற்றிற்குத் தானே ஒப்பிடவேண்டும்?

மரணக் குறிப்புக் கல்!
''எல்லாம் நன்மைக்கே'' என்ற இவனது மூலமந்திரம் இவனை ஏமாளியாகவும் கோமாளியாகவும் ஆக்கிவிட்டதுஇவன் சென்ற பாதை, கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பாதை. இதில் எவரும் செல்லக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவே எங்கள் செலவில் இந்த மரணக் குறிப்புக் கல்லை நாட்டியிருக்கின்றோம்.

ரப்பர் கொள்கை!
இவன் ஒரு கொள்கைக் குரங்கு!
விடாப் பிடியாய்ப் பிடித்து வீணாய்ப் போனவன்!
மனித வாழ்க்கையில் ரப்பர் கொள்கைதான் வெற்றிபெறும். கருங்கல் கொள்கை (மீறிய பளுவினால் பிளந்து முறிவது) கடைத் தேற வைக்காது.
ரப்பராய் இல்லாமல் பாப்பராய் மாண்டு மறந்தான்! எல்லாம் துறந்து நாடோடியாக ஆகி அநாதைப் பிணமாகக் கிடந்தான்!

கால் தூசிக்கு மதித்தார்களா ?
இவனால் முன்னுக்கு வந்தவர் ஆயிரக்கணக்கிலிருக்கலாம்! ஆனால் அவர்கள் இறுதிக் காலத்தில் கால் தூசிக்கு மதித்தார்களா?

மனம்தானே இன்பத்தின் ஊற்று
"அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நான் எவ்வாறு வாழ்ந்தேன்? என் வாழ்க்கையில் இன்பங்கள் கண்டேனா இல்லையா? மனம்தானே இன்பத்தின் ஊற்று. பதவியையும், பணத்தையும், புகழையும் வைத்துத்தானா மனித வாழ்க்கையை அளக்க வேண்டும்?" என்று இவன் அடிக்கடி மனோதத்துவம் பேசியிருக்கலாம்...... வாழ்க்கையில் தோல்வியுற்ற யாவரும் பேசிய வறண்ட தத்துவந்தானே இது?

மூடக் குரங்கு

"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற ஆன்றோர் வாக்கு மட்டுமல்ல,  "பதவியில்லார்க்கு உதவியில்லை" என்ற இன்றைய வாக்கையும் உணராத இவனை அறிவாளி என்று நாங்கள் ஒப்ப மாட்டோம். மின்சாரக் கம்பியை இறுக்கிப் பிடுத்து மாண்ட மூடக் குரங்கு என்றே கூறுவோம்.
இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ள விலாசந் தெரியாமல் மடிந்து போன இவனை இன்றே மறந்து விட்டு எல்லோரும் வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்லுங்கள்!
இந்தக் கல் ஒரு ஆபாய அறிவிப்பு! அதன் அடியில் இருப்பவனும் அவ்வாறே!


இப்படிக்கு,
இவனை ஒருக்கால் மதித்தவர்கள்
10-04-1969


கட்டுரையாளர் குறிப்பு: (அதாவது பேரறிஞர் குத்தூசி குருசாமி பி.. அவர்களின் குறிப்பு)

இம்மரணக் குறிப்பு யாரைப் பற்றி எழுதப் பட்டிருக்கிறதோ அவர் இதற்காக ஒரு சிறிதும் வருந்த மாட்டார் என்று அவர் சார்பில் உறுதி கூறுகிறேன்!


பேரறிஞர் குத்தூசி குருசாமி பி.. அவர்கள் 11-10-1965-ல் இறந்தார். இக்கட்டுரை 'விடுதலை'யில் 5-2-1959-ல் பலசரக்கு மூட்டையில் வெளிவந்தது. மீண்டும் ''அறிவுப்பாதை''யில் 23-04-1965ல் தமது 60-வது பிறந்த நாளன்று பேரறிஞர் குத்தூசி குருசாமி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.