Sunday, September 19, 2010

கை வெட்டிகள்!

திருநெல்வேலி மாவட்டம் கப்பிக்குளம் என்ற கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் படித்த வள்ளியம்மாள் என்ற 13-வயது மாணவியை அடித்து விட்டாராம், பள்ளி ஆசிரியர். அதைத் தன் தந்தையிடம் கூறிவிட்டாளாம், சிறுமி. ஆசிரியர் அடித்தாலும் வதைத்தாலும் சும்மாயிருக்க வேண்டுமே தவிர, வீட்டில் எப்படிச் சொல்லலாம். ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அடுத்த தண்டனையிலிறங்கினார். அதாவது சிறுமியின் கையை வெட்டிவிட்டாராம், தலைமை ஆசிரியரான கோவில் பிள்ளை! அந்தக் காலமாயிருந்தால் குருவுக்குக் காணிக்கையாக கையை வெட்டி எடுத்துக் கொண்டார் என்று சும்மாயிருந்திருப்பார்கள்!

துரோணாச்சாரி என்ற பார்ப்பனன் அப்படித்தானே செய்தான்? தம்மிடம் நேராகப் படிக்காமல் வில்வித்தை கற்றுக் கொண்டதற்காக, (தன் சீடன் அர்ச்சுனனுக்கு ஆதரவாக) ஏகலைவன் என்ற வேடனின் வலது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார், பரம யோக்கியரான துரோணாச்சாரி!

இது கலியுகமல்லவா? மேற்படி கைவெட்டி வாத்தியார் மீது வழக்குத் தொடரப்பட்டதாம். 5 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாம்!

பள்ளி ஆசிரியர்களில் பலவிதமுண்டு
'எவனோ எப்படியோ தொலையட்டும்! நமக்கென்ன? நாளை எண்ணிக்கொண்டு முதல் தேதியன்று(சில பள்ளிக்கூடங்களில் 2-3 மாதம் கழித்துத்தான் சிறிது சிறிதாகக் கிடைக்கும்!) சம்பளத்தை வாங்கிப் போவோம்!' என்றிருப்பவர்கள் ஒரு ரகம்

'நல்லாசிரியர் என்று பெயர் எடுக்க வேண்டும்; நம்மிடம் படிக்கின்ற பிள்ளைகள் திறமைசாலிகளாகவும், ஒழுக்க சீலர்களாகவும் வளர்ந்து, அவர்கள் ஆயுள் முழுவதும் நம்மை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று பணியாற்றுகிறவர்கள் ஒரு ரகம். 

(என்னிடமிருக்கின்ற நல்லகுணம், இலக்கிய ஆர்வம், திறமை - ஆகியவை ஏதாவதிருந்தால், இவையெல்லாம் என் ஆசிரியர்களைச் சேர்ந்தவை என்றுதான் நான் இன்னும் கருதிக் கொண்டிருக்கிறேன்). இந்த ரகம் கொஞ்சம் அபூர்வம்!

இனி மூன்றாவது ரகம் ஒன்றிருக்கிறது! இதுதான் மேற்படி கோவில் பிள்ளை ரகத்தைச் சேர்ந்ததுபாடஞ்சொல்லிக் கொடுப்பது முன்பின் இருந்தாலும் மாணவ-மாணவிகளை மாட்டையடிப்பது போல் அடிப்பார்கள்! இவர்கள் எருமை மேய்க்க வேண்டியவர்கள். தவறிப்போய் இந்த வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

ஒரு சிறுவன் காலில் அடிபட்டுப் பெரிதாக வீங்கியிருந்தபோது, அதைக் காட்டி கெஞ்சியுங்கூட, அவன் பள்ளியிலுள்ள தமிழாசிரியர் அதைப் பொருட்படாத்தாமல் வேண்டுமென்றே ஒரு மணி நேரம் வரையில் அவனை நிற்க வைத்தே படிக்கச் சொன்னாராம்! மற்றொரு ஆசிரியர் ஒரு சிறுவனின் காதைப் பிடித்துத் திருகியதால் மூன்றுநாள் வரையில் வலி தாங்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக அவன் தாயார் என்னிடம் கூறினார்.

மனித இதயம் படைக்காத சிலர் பள்ளி ஆசிரியர்களாக வந்து விடுவதனால்தான் இந்தத் தொல்லை! இங்கிலாந்திலுங்கூட சில சமயங்களில் ஆசிரியர்கள் பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து விடுகிறார்களென்றும், ஆனால் ரஷ்யாவில் மட்டும் இந்தக் காரியம் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறதென்றும், சென்ற ஆண்டில் வெளியான ரஷ்யக் கல்வி முறை பற்றிய ஒரு நூலில் படித்தேன்.

மேற்படி கொவில் பிள்ளையைப் போன்ற பள்ளி ஆசிரியர்கள் கசாப்புக் கடை வைக்க வேண்டியவர்கள்! அல்லது ஆடு-மாடு வெட்டுகின்ற(Slaughter house) இடத்தில் வேலை செய்ய வேண்டியவர்கள்! ஒருக்கால் உயிர்ப்பலி தடைச்சட்டம் வருவதற்கு முன்பு இவர் அய்யனார் கோவில் பூசாரியாயிருந்தாரோ என்னவோ? ஆனால் கிருஸ்துவப் பெயர் மாதிரியிருக்கிறதே! பாவம்! ஒரு ஆதித்திராவிடச் சிறுமியின் கையை வெட்டியிருக்கிறார், ஈவு இரக்கமில்லாமல்!

நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்கும், ஒழுக்க சீலமுடைய மாணவர்களுக்கும் பள்ளியில் பரிசு வழங்கப்படுவதுபோல், பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்பது என் ஆசை! எப்படியென்றால் - அடிக்காமலோ, கிள்ளாமலோ, கொடுமைப்படுத்தாமலோ திறமையாகக் கற்பிக்கக் கூடிய பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு ஒரு தங்க மெடல் தர வேண்டும்! அந்த மெடலில் 'இவர் மனிதப் பிறவி' என்று செதுக்கியிருக்க வேண்டும்! 

*******

- இக்கட்டுரை 01-09-1952 ல் வெளியானது.
-நன்றி, 
தோற்பதே நல்லது(புத்தகம்),
பொன்னி பதிப்பகம், 
மடிப்பாக்கம், சென்னை-91. 

No comments:

Post a Comment