Tuesday, March 12, 2019

ஆரியன் மேக்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் வெறுத்து, உலகத்தையே துறந்து, ''காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா!" என்பதை உணர்ந்தும், "இருப்பது பொய், போவது மெய்'' என்று தத்துவத்தை உணர்ந்தும், ஆங்காரமும் அடக்கி, ஐம்புலனைச் சுட்டெரித்துத், தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டிய பக்குவ நிலையையடைந்தும், உள்ள துறவிகளே தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ‘துறவிகள் மாநாடு’ நடத்தும்போது, துறவிகளுக்குக் கூட சோதிடம் கூறி, சகுனம் பார்த்துச் சொல்லக்கூடிய அளவுக்கு மூடத்தனத்தையும் பரப்பியிருக்கும் சோதிடர்கள் மாநாடு கூடுவதில் தவறென்ன? ஆகையால் சோதிடர்களே, நவக்கிரகங்களையும் ஆட்டிப்படைக்கும் பஞ்சாங்க வீரர்களே, சோம்பேறிகளை உற்பத்தி செய்யும் 'ஆரியன் மேக்' இயந்திரங்களே! நீங்கள் ஒரு மாநாடு கூட்டுங்கள், என்று ஆலோசனை கூறுகிறேன்.

''எங்களுக்கென்ன குறைவு? அதுவும் நல்ல நேரம் பார்த்து சுயராஜ்ய பெட்டிச் சாவியை வெள்ளைக்காரனிடமிருந்து வாங்கினார்களே, தலைவர்கள்! அந்த நிமிஷத்திலேயே நாங்கள்தான் இந்த நாட்டை இனி ஆளப்போகிறோம் என்று முடிவு கட்டிவிட்டோமே! அபிசீனியாவுக்கும், இத்தாலிக்கும் சண்டை நடந்தபோது நாங்கள் எல்லோரும் அபிசீனியாதான் ஜெயிக்கும் என்று சோதிடம் சொன்னோம்; ஆனால் இறுதியில் இத்தாலிதான் ஜெயித்தது. அப்படியிருந்தும் எத்தனையோ முட்டாள்கள் எங்களைத்தானே நம்பியிருக்கிறார்கள்? இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15-க்குப்பிறகு எல்லா தென்னிந்திய பத்திரிகைகளிலும் இவ்வளவு ஜோசியப் பிரசாரம் நடக்குமா? உன்னாலும் உன் கூட்டதாலும் எங்கள் பிழைப்பை அசைக்கவே முடியாது. பஞ்சம் அதிகம் ஆக ஆக, ஜோசியப் பித்தம் அதிகமாகும். நீயும் உன் கூட்டமும் ஜோசியம் பார்க்காமலிருந்தால் எங்களுக்கென்ன? காங்கிரஸ் சர்க்கார் புண்ணியத்தில் குருட்டுத்தனம் குருத்துவிட்டு வளர்கிறது. எங்களுக்கு மாநாடும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்!'' என்று சோதிடர்களில் சிலர் கூறலாம்!

இது உண்மையாயுமிருக்கலாம். ஆனால் சர்வ வல்லமையுள்ள சர்க்கார் கூட தற்காப்பு விஷயத்தில் முன் ஜாக்கிரதையாயில்லையா? கடவுள்கூட தனி அறைக்குள்ளிருந்து கொண்டு வெளியே பூட்டுப் போடச் சொல்கிற இந்த நாளில், நீங்கள் அலட்சியமாயிருக்கக் கூடாது; யானைக்கும் அடிசருக்கும். ஆகையால் நீங்கள் ராஜாஜி மண்டபத்தில் (எங்களுக்குத்தான் அங்கே கூட்டம் போட இடம் கிடைக்காதே தவிர, எம்.எஸ்.க்கும், உங்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் பிறகுதானே மற்றவர்களுக்கு) ஒரு மாநாட்டைக் கூட்டுங்கள். பேச்சு கீச்சு வேண்டாம். கருப்புச் சட்டைக்காரன் திடீரென்று அங்கே வந்து தொலைப்பான். இரண்டு கைகளையும் மூடிக்கொண்டு, "ஏ, சோதிட நிபுணர்களே, இந்தக் கைக்குள் என்ன இருக்கிறது? இதில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டுத் தொலைப்பான். அண்ணன் ஜாதகத்தையும் தங்கை ஜாதகத்தையும் கொண்டு வந்து இரண்டுக்கும் திருமணப் பொருத்தம் பார்க்கச் சொல்வான்! உங்களில் ஒருவருக்குக்கூட அதைக் கண்டுபிடிக்கத் தெரியாது என்ற இரகசியம் சோதிடங்கேட்கும் மூடர்களுக்குத் தெரியாதேயொழிய சுயமரியாதைக்காரனுக்கு நன்றாகத் தெரியுமே! ஆகையால் பிரசங்கமே வேண்டாம்.

கீழ்க்கண்ட ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் நிறை வேற்றி விட்டு மாநாட்டைக் கலைத்து விடுங்கள். மிகமிக முக்கியம். உங்கள் தொழிலையே பாதிக்கக் கூடியது!  உங்கள் வயிற்றில் ஒரு வண்டி மண் விழும்படியான விஷயம். அலட்சியமாகயிருக்காதீர்கள்!

தீர்மானம் ''ஜாதகம் கணிப்பதில் நல்ல திறமையுடைய என் தகப்பனார் என் ஜாதகத்தை எங்கேயோ அலட்சியமாக வைத்துவிட்டார்; பிறகு என் பிறந்த தினம்கூட யாருக்கும் தெரியவில்லை. எனக்கும் இன்றைக்குக்கூடத் தெரியாது; ஒரு நாள் போல மற்றொரு நாளும் நல்லதாகும்". என்று மே. த. ராஜகோபாலாச்சாரியாரவர்கள் கூறியிருப்பதனால் ஜாதகமேயில்லாதவருக்கு கவர்னர் ஜெனரல் வேலையை கிடைத்திருக்கிறதே என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றி, ஜாகத்தில் நம்பிக்கை போய்விடுமாதலாலும், இதனால் சிறுபான்மையோர் பிழைக்க வழியில்லாமல் பிச்சையெடுக்க வேண்டி ஏற்பட்டு விடுமாகையாலும், இந்த உண்மையை வெளிப்படையாகக் கூறிய நாஸ்திகராகிய கவர்னர் ஜெரனல் கூறியதை இம்மாகாண சோதிடர் மாநாடு நவக்கிரக சாட்சியாக மிகமிக வன்மையாகக் கண்டிக்கிறது."

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு எனக்கு அதன் நகலை அனுப்புங்கள்.
அலட்சியமாயிருக்கக்கூடாது! ஆச்சாரியார் வெகு ஜாடையாக சோதிடத்தின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! அவர் பலே கைக்காரர், ஒரே கல்லில் இரண்டு காய் அடிப்பவர்!

"ஜாதகமேயில்லாத நான் இந்தியாவிலேயே மாபெரும் பதவியையும், புகழையும் அடைந்திருக்கிறேனே. வெறும் தகர டப்பாக்களாகிய நீங்கள் ஜாதகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்களே! உங்கள் மூளையை பாரிசில் தான் சலவை செய்யவேண்டும்!'' என்று அர்த்தப்படும் படியாக அவர் கூறியிருக்கிறார்!

ஆகையால் அயர்ந்து விடாதீர்கள். ஆரூட நிபுணர் களே அலட்சியமாயிருந்தீர்களோ, வெகு சீக்கிரத்தில் நீங்களெல்லோரும் கையில் கூடையும், மண்வெட்டியும் எடுக்க வேண்டிய நிலைமை வந்துவிடும்!

கள் குடிக்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்பது போல, சோதிடம் கூறவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று சட்டமியற்றும் சர்க்கார் ஒன்று வருவதாக வைத்துக்கொள்ளுங்கள்! (அந்த மாதிரி ஒரு பெரிய நாடே இருக்கிறது என்பது பற்றி ‘சோதிடாலங்காரம்’ என்னும் நூலிலும், ‘சோதிடக்களஞ்சியம்’ என்னும் நூலிலும் ஏதாவது இருக்கிறதா?) அப்போது நீங்களெல்லோரும் என்ன செய்வீர்கள்?

தயவு செய்து உங்கள் ஜாதகங்களை ஊன்றிக் கணித்து பனிரெண்டு மாதப் பலன் எழுதி வையுங்கள்! எங்கே பார்க்கலாம்! அடுத்த ஆண்டு இதே மாதத்தில் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கப்போகிறதோ? பார்க்கலாம்!

நானும் உங்கள் ஜாதகங்களை எழுதி வைத்திருக்கிறேன். இப்போது சொல்லமாட்டேன். உங்களைப் போலவே, நடந்தபிறகுதான் சொல்லப்போகிறேன்! நானும் ஒரு ‘மாஜி குட்டி ஜோசியர்’ அல்லவா?

No comments:

Post a Comment