Friday, March 8, 2019

அடித்தார் அடிகளார்!

இயக்க நண்பர் சென்னை தேவராசன் எழுதியுள்ளார்; அதன்பிறகுதான் நானும் படித்துப் பார்த்தேன். பொங்குகிறார், தேவராசன் அடிகளார் மீது!
அப்படியொன்றும் மோசமாகப் பேசவில்லையே அடிகளார், அவர் பேசியிருப்பது:

"சாக்ரட்டீசை நாடு தெரிந்து கொண்டுள்ள அளவிற்கு, இங்கர்சாலை நாடு தெரிந்து கொண்டுள்ள அளவிற்கு, நமது அப்பர் அடிகளைத் தெரிந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம், தமிழர்கள் நன்றி கொன்றவர்களாகப் போனார்கள்...... ஏதாவதொரு புதிய கருத்து, புதிய சித்தாந்தம் என்றால், சாக்ரட்டீஸ் சொன்னார். இங்கர்சால் சொன்னார், பிளாட்டோ சொன்னார் - என்று சொன்னால்தான் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற ஒரு மனோபாவம்! அத்தகைய ஒரு நெறி வளர்ந்திருக்கிறது.

இங்கர்சால், பிளாட்டோ, சாக்ரட்டீஸ் போன்றவர்களை விட சமுதாய சீர்திருத்தத்துக்கு தகுதியுடைய பெரியார் அப்பர் அடிகள் என்பது என்னுடைய நம்பிக்கை ...

அப்பரடிகள் வரலாறு ஒரு சோதனை நிறைந்த வரலாறு. அவர் சமண - பவுத்த நாகரீகம் பரவியிருந்த காலத்தில் அந்த நாகரீகத்தை எதிர்த்துப் போராடினார். சமண பவுத்த சமயங்களால் தமிழிசை அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்காக அவர் ஒரு பேரியக்கமே நடத்தினார்.”


(தென்றல் திரை 14.10.64, பக்கம் 2) இப்படியாக அடித்தார், 64 ஆவது நாயன்மாராக அவதரித்துள்ள இக்கால அடிகளார்  (திருச்சி தேவர் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவில்).

பெரியார் சென்னையில் ஒரு முறை வர்ணித்தபடி, "ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார்” அவர் கள், இன்றைய கருஞ்சட்டைகளை நோக்கி இப்படிக் கூறுகிறார் என்றே கொள்ளலாம்.

இக்கால பவுத்த சமணர்களாக வந்துள்ள சைவசமய - இந்தமத – எதிர்ப்பாளர்களே, அன்று செய்ததுபோல் இன் றும் ஆட்சியாளரின் துணைகொண்டு உங்களைக் கழுவேற்ற முடியும்; கழுவேற்றப் போகிறோம். இப்போதுதான் உங்கள் கொள்கைகளையெல்லாம் உங்கள் கண்முன்பு தூக்கில் மாட்டித் தொங்கவிட்டிருக்கிறோம். எங்கள் அடுத்த வேலை. அன்று எண்ணாயிரம் சமணர்களை சைவம் செய்த வேலைதான்.

அக்கால அப்பர் அடிகள் இக்கால வினோபாபவே மாதிரிக் கால்நடையாக நடந்து சைவ மத எதிரிகளை ஒழித்துக்கட்டினார். “ஆனால் இக்கால அப்பர் (குன்றக்குடி) அடிகளான நான், சுற்றி வந்து சைவத்தைப் பாதுகாத்து வருகிறேன். நாத்திகப் பெரியார் வாயினாலேயே "ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானம்" என்ற சொற்களை வரவழைத்த ஒரே சைவத் தலைவர் யான்” இப்படிச் சொல்லலாம், குன்றக்குடி அடிகளார் அவர்கள். ஆனால் ஒன்று, நாத்திகப் பெரியாரின் இயக்கத் தலைநகரமாகிய அதே திருச்சியில் பேசிய இதே பேச்சில் 1964 அப்பர் அடிகள் கூறியிருக்கிறார். படியுங்கள்:

"கழனிகளிலேயே களை பிடுங்க இறங்குகிறவன் முதலில் களை எது, பயிர் எது, என்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையானால் பயிரை களை என்று கருதி பிடுங்கிவிடுவான், இறுதியில் விவசாயிக்கு எதுவும் மிஞ்சாது என்று ஒரு சமயத்தில் பர்னாட்ஷா மிக அழ காகக் கூறினார்.”

போகட்டும்: சாக்ரட்டீஸ் மீதும், இங்கர்சால் மீதும், ப்ளாட்டோ மீதும் வந்த கோபம் பர்னார்ட்ஷா என்ற பச்சைத்தமிழர் மீது வராமல், களை பிடுங்குவதற்கு மேற்கோளாக அவரது பேச்சை எடுத்துக் காட்டினாரே, குன்றக்குடி "மகாசந்நிதானம்" அவர்கள், அதுவரையில் பாராட்ட வேண்டியதுதான்!

சைவ நாயன்மார்கள் பவுத்த - சமணர் என்ற களையை அன்று பிடுங்கி எறிந்தது போல் நான் பகுத்தறிவுக் கூட்டமாகிய களைகளைப் பிடுங்கி எறிந்து சைவம் என்ற பயிரைப் பாதுகாக்கப்போகிறேன். என்று திருவாய் மலர்ந்தருள்கிறீர்களா, அடிகளே! அப்படியே செய்யுங்கள் ஆனால் பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டத்துக்கு அழைத்தால் மட்டும் மறந்துவிடாதீர்கள். போவதுதான் அவருக்கும் பெருமை! தங்களுக்கும் ஒரு புதிய பிரசார மேடை!

அதுசரி, "ஆலயங்களில் தமிழ் அர்ச்சனைக் கிளர்ச்சி”என்று அடிக்கடி சொல்லி வந்தீர்களே: என்ன ஆச்சு அடிகளே! இரண்டு பெருந்தலைவர்களின் சினிமாக ஒழிப்புக் கிளர்ச்சி, ரேடியோவுக்கு லைசென்ஸ் வாங்காக் கிளர்ச்சி - இரண்டும் நடக்கும்போது இதுவும் நடக்கும் என்கிறீர்களா? ரொம்ப சரி!

ஏமாளித்தமிழன் தூங்குகிற வரையில் அவன் தொடையில் கயிறு திரித்துக் கொண்டிருப்பதுதானே தகுதி மிக்க தலைவர்களுக்கு அழகு?

தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அறிவுப்பாதை 23.10.64

No comments:

Post a Comment