Friday, March 8, 2019

அருமையான ஆலோசனை

மதுரை பிராமண இளைஞர் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் 'காயத்ரி' என்ற ஏட்டின் டிசம்பர் 1964 தலையங்கம் பகுதியில் வந்துள்ள பகுதியை நம் இயக்க நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார். (அவருக்கு நன்றி) அது இது:

"புதுக்கோட்டை பிராமண அபிவிருத்தி சங்கத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இறுதி உரையாற்றிய, திருச்சி முன்னாள் மாவட்ட நடுவர் திரு. எல்.எஸ்.பார்த்தசாரதி அய்யர், பிராமண சமூகம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மேலும் கூறியவற்றுள் சில: இது மாதிரி பிராமண சங்கங்கள் நாடெங்கும் பெருக வேண்டும். பிராமண சிறுவர்களுக்கு எட்டு வயதிற்குள் பூணூல் போட வேண்டும். அவர்கள் விடியற்காலை எழும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். பெண்களை எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல் படிக்க வைக்கக்கூடாது. அவர்கள் மத சார்பில்லாத சினிமாக்களை பார்ப்பதிலிருந்து தடுக்க வேண்டும். பெண்கள், வீட்டிற்கு அவசியமான அப்பளம் போடுதல் முதலிய வேலைகள் செய்து தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்''

மாவட்டத்தின் நீதிபதி பதவியிலிருந்த ஒருவர் மார்பு வடத்தின் அவசியம் பற்றி இப்படிப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. தம் பேச்சை அப்படியே யாரும் கேட்டு நடக்க மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாததல்ல, அவர் சொன்ன இரண்டொன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. எட்டு வயதில் எல்லா அக்கிரகாரக் குஞ்சுகளுக்கும் பூணூல் மாட்டித்தான் விடுகிறார்கள். ஆனால் அது சாவி மாட்டிக் கொள்ளத்தான் பயன்படுகிறது. ‘காயத்ரி’ வேண்டுமா? காஃபி வேண்டுமா? என்று கேட்டால் அக்கிரகாரம் முழுவதுமே காஃபிதான் முக்கியம் என்று ஒரு மனதாகக் கூறிவிடும்.

விடியற்காலையில் எழுகின்ற பழக்கத்தை எந்த பார்ப்பனச் சிறுவனுக்கும் புதிதாகச் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. தங்கள் பெற்றோர்களைப் பார்த்து அதன்படியே நடந்து கொள்வார்கள்.

காலஞ்சென்ற கைவல்ய சாமியார் என்னிடமும், பொன்னம்பலனார், S.V.லிங்கம் போன்றவர்களிடமும் அடிக்கடி ஒன்று சொல்வார்:

"இந்தப்பா, பார்ப்பானை ஒழிக்க உங்களால் முடியாதப்பா. அவன் 2000 வருஷமாக அதிகாலை 5 மணிக்கு முன்பே எழுந்து குளிரிலும், மழையிலும் கூடக் குளிர் தண்ணீரில் முழுகிவிட்டு, படிக்கவேண்டியதைப் படித்து தன் ஜாதியையும், தன் மதத்தையும் உயர்த்தி வைத்திருக்கிறானப்பா. நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் அவனை இறக்க வேண்டுமானால் 2000 வருஷமாவது அப்படிச் செய்ய வேணுமப்பா! நீங்கள்தான் வெய்யில் காலத்தில் கூட காலை மணிக்கு ‘பெட்காஃபி’ குடித்து விட்டு இழுத்துப் போர்த்தித் தூங்கிவிட்டு 9 மணிக்கு வெந்நீரில் குளிக்கிற சோம்பேறிகளாயிருக்கிறீர்களே! நீங்கள் எப்படியப்பா அவனை ஒழிக்கப்போகிறீர்கள்?" (நீங்கள் என்றது நம் இனத்தாரையே பொதுவாக).

ஆகையால் அதிகாலையில் எழுவது என்பது தொழிற்சாலை முதல் 'ஷிஃப்ட்' வேலைக்குப் போகிற தொழிலாளி மாதிரி அக்கிரகாரக் குஞ்சுகள் அத்தனைக்கும் இரத்தத்தில் ஊறிப்போனப் பழக்கம்.

ஆயிரம் பெண்களில் 900க்குத் திருமணம் ஆகாமலிருப்பதற்குக் காரணமென்ன? பெண்களும் படித்துவிட்டு எல்லாத் துறைகளிலும் புகுந்து சம்பாதித்துக் கொண்டி ருக்கிறார்களே! இவர்களை நோக்கி, ‘வீட்டில் உட்கார்ந்து அப்பளம் போடுங்கள்’ என் றால், இது என்ன, ‘கைராட்டினக் கிராக்’குக்குத் தம்பி போலிருக்கிறதே! இந்தக் காலத்தில் அப்பளமாவது, முறுக்காவது?

“வெள்ளை முக்காடு எங்காவது இருந்தால் தேடிப்பிடியுங்கள்! நாங்களென்ன, மலையாளத்து நாயர்களா. அப்பளம் போட? சமையலுக்கு புதுப்புது 'குக்கர்'கள் வந்துவிட்ட பிறகு, ஷோக்காய் ஆஃபீசுக்குப் போய் விசிறி அடியில் அமர்ந்து பேனா பிடித்து, மாதம் 100, 200, 300 என்று சம்பாதிப்பதை விட்டுவிட்டு அப்பளக்குழவியை உருட்டிக் கொண்டிருக்கச் சொல்கிறாரே, இவர்?
இவர் மட்டும் தர்ப்பை-பஞ்சாங்கத்தை உதறிவிட்டு வக்கீல் வேலைக்குப் படித்து இங்கிலீஷை விற்று, பேனா பிடித்து எழுதி, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிச்சாரே. நாம் மாத்திரம் ஏன் அப்பளம் போடணும்?” இப்படித்தான் கேட்பார்கள், அக்கிரகாரத்து நாரிமணிகள்! ஆகவே இது நடக்காத காரியம்.

இனி, சினிமா பார்க்கக்கூடாது என்பது பெரிய வெடிகுண்டு! துணியே உடுத்தக்கூடாது என்றால் கூட ஒருக்கால் சிந்திக்கலாம். சினிமாவுக்குப் போகக்கூடாது என்று பெண் உலகத்தைப் பார்த்துக் கூறுவதா? சினிமாவும், பூக்கடையும், துணிக்கடையும் பெண்குலத்தை நம்பித்தானே உயிர்வாழ்கின்றன? 'மாட்டினி' காட்சி இருப்பதே பெண் உலகத்துக்காகத் தானே! அதாவது ஆண்கள் யாவரும் ஆஃபீசில் உள்ள நேரத்தில் தொல்லையில்லாமல் சென்று வரத்தானே! எனவே, இதையும் எந்த அக்கிரகாரப் பெண்ணும் பின்பற்றத் தயாராயில்லை. “படித்த பெண்களைக் கண்டறிய பயமாயிருக்கிறது! ஆகையால் கல்லூரிப் படிப்பு வேண்டாம்" என்று முன்னாள் நீதிபதி கூறியிருந்தால் ஓரளவு உண்மையாயிருக்கலாம்.

அது கிடக்கட்டும்; அக்கிரகார அம்சாவை நோக்கி அப்பளம் போடச் சொல்வது போல், வாலண்டினாவை நோக்கி வந்தால் - வடகம் போடச் சொல்வதற்கு ரஷ்யாவில் ஒரு வார்டோ சார்டி (பார்த்தசாரதி) இல்லையே! இன்னும் பழைய பஞ்சாங்கமெல்லாம் கிழிந்து போய்விடவில்லை. பட்டம் பெற்று பூணூல் உருண்டையில் எங்கோ ஒன்றிரண்டு பறந்துகொண்டு தானிருக்கிறது!

அறிவுப்பாதை 18.12.64

No comments:

Post a Comment