Thursday, March 7, 2019

அவர் கவலை அவருக்கு!

இன்னும் இடிந்த கோயில்களையும் கோபுரங்களையும் புதுப்பித்து முடியவில்லையே! சாமிகளுக்கும், அம்மன் களுக்கும் நல்ல வீடில்லாமல் விட்டுப்போய்விட்டால் என்ன ஆகும் அவர்களின் கதி? என்பது முன்னாள் நீதிக்கட்சித் தலைவரின் ஒரே கவலை!

நமக்கு அடுத்த ஓராண்டு வரைக்கும் முன் கூட்டியே காலட்சேப அட்வான்ஸ் புக்கிங் வரவில்லையே, மக்கள் நம் அருள்வாக்குக் கேட்காதபடி இப்படி வீணாகக் கெட்டழிகிறார்களே, காலட்சேபவாதிகளின் கவலை!
இரவு 11 மணி முதல் மறுநாள் கால 6 மணி வரையிலுங்கூட கடவுள் பாதுகாப்புப் பிரசாரம் செய்ய முடியாமல் ஒலிபரப்பு நிலையத்தையே மூடி வைத்திருக்கிறார்களே! இந்த இரா நேரத்தில் நாத்திகப் பேய் வந்து நம் பக்தர்களின் உறக்கத்தில் அவர்களை வீரர்களாக்கி விட்டால் என்ன செய்வது? என்பது இந்திய வானொலிப் பிரசாரத்தையே மலையாக நம்பிக்கொண்டிருக்கின்ற இந்தியக் கடவுள்களின் கவலை!

எல்லா எதிர்க்கட்சிக்காரர்களும், நேர்மாறான கொள்கை உடையவர்களும், முரடர்களும் நம்கட்சியில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து கொண்டேயிருந்தால், நம் கட்சிக்கென்று பரம்பரையாக இருந்துவரும் பழமைக் கொள்கைகளெல்லாம் அழிந்து போய்விட்டால் என்ன செய்வது? என்பது பழைய காங்கிரஸ்காரர்களின் கவலை!

சோஷலிச வளர்ச்சிக்கு இடையூறு என்ற காரணத்தினால், சீனாவில் அரசாங்க அதிகாரிகள் வீடு வீடாக நுழைந்து பூசை மாடங்களிலுள்ள பொருள்களை அகற்றி விட்டு, மத சம்பந்தமான பொருள்கள் விற்பனையாவதையும் தடை செய்கிறார்களாமே! இதுபோல் இந்திய அரசாங்கமும் சோஷலிசம் என்ற பெயரால் இப்படியெல்லாம் செய்யாதபடி ஜனநாயகமதப் பாதுகாப்பு சோஷலிசத்தையே இன்றுபோல் எப்போதும் நிலைநாட்டிக் கொண் டிருக்கவேண்டுமே! என்பது சாதி மதப் பற்று கொண்ட பாரத புத்திரர்களின் கவலை!

இப்படியாக, அவரவர் கவலை அவரவர்க்கு! ஆனால் நமது புது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு என்ன கவலை வந்திருக்கிறது, பார்த்தீர்களா?
"கான்ஸ்டபிள் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. மிகுந்த ஊதியம் கிடைக்கக்கூடியதும், மிகுந்த வசதியானதுமான தொழிற்சாலைப் பணிகள், வாணிபப் பணிகள் - முதலியவற்றை நாடி இளைஞர்கள் போய்விடுகிறார்கள், சென்னையில் 200 கான்ஸ்டபிள் தேவை: திருச்சி நகரில் 150 பேர் தேவை. என்கிறார் திரு. அருள்!

அய்யா! இதற்காகக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான நடைபாதைப் பிள்ளையார்களும், முச்சந்திப் பிள்ளையார்களும் இருக்கிறார்கள். போதாக் குறைக்கு போலீஸ் நிலையங்களிலும் பிள்ளையாரும், அவர் தம்பியும், திருப்பதியாரும் இருக்கிறார்கள்! கான்ஸ்டபிள் போதாத குறையை இவர்கள் போக்கி விடுவார்கள்!

மக்களுக்கு எவ்வித விக்கினமும் (கேடும் ) வராமல் விக்கினேஸ்வரால் பார்த்துக்கொள்ள முடியாதா? ஏன், இப்படி நாத்திகர் மாதிரிக் கவலைப்படுகிறீர்கள்? இன்றுள்ள துப்பாக்கிகள் கூடத் தேவையில்லை!
"அவனன்றி ஓரணுவும் அசையாது" ஆனால் அம்மன் தாலி பறிபோனால் கண்டுபிடிப்பதற்கு மட்டும் இரண்டு நல்ல துப்பறியும் நாய்களும் சில போலீஸ்காரரும் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், போதும்!

"நான் இருக்கப் பயமேன்?” என்று கேட்கும் சாயிபாபா வேறே ஊர் ஊராக முளைத்திருக்கிறதே- போதாதா?

ஈஸ்வரா! இந்த பக்திப் பாரதமாதாவுக்கு நீதானப்பா "அருள்” (அய்.ஜி. அல்ல!) புரிய வேண்டும்!

அறிவுப்பாதை 25.9.1964

No comments:

Post a Comment