Monday, March 11, 2019

காஃபியும் கல் கடவுளும்

''ஓய், காஃபியாரே? கொஞ்நாளா உம்பாடு யோகமாய்த்தானிருக்கு, உம்மைப் பார்ப்பதே அபூர்வமாயிருக்கே! சுதேச மன்னர்கள் கூட இப்போது சாதாரணமாக நடமாடுகிறார்கள், உமக்குத்தான் ரொம்ப கிராக்கி வந்திருக்கிறது! அதுமட்டுமா? நீர் இந்நாட்டுக்கு வந்தது முதல் என்னை யாருமே லட்சியம் செய்வதில்லையே!"

"கல் கடவுளாரே! அற்பனாகிய என்னைக்கண்டு தாங்கள் கூட இப்படிப் பொறாமைப்படலாமா? நான் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், என் தரிசனம் எவ்வளவு அபூர்வமாயிருந்தாலும் தங்களைப் பொறுத்தமட்டில் நான் ஒரு தீண்டப்படாதவன்தானே. தங்கள் தலைமீது புழு பூச்சிகள் கூட, நெளிகின்றன. ஆனாலும் என்னை ஏற்றுக்கொள்ள மட்டும் மறுக்கிறீர்களே, நியாயமா? என் காலடியில் கிடக்கும் அந்தப் பயல் பால் என்பவனை மட்டும் குடகுடமாக ஊற்றிக்கொள்கிறீர்களே! நான் உள்ள இடங்களிலெல்லாம் இந்தப் பால் என்னிடம் தஞ்சம் அடைகிறான். நான் வந்த பிறகு இவன் ஊரிலேயே அகப்படவிடாமல் அழித்து, ஒழித்துவிட்டேன். 4 மாடுகள் கறக்கும் வீட்டிலே தாராளமாக குடிப்பதற்கு பால் கிடைக்க முடியாதே, தெரியாதா? என் பெயரால் உள்ள நிலையங்களில் அத்தனை பாலையும் கொண்டுபோய்ச் சேர்த்து விடுவார்களே. எனக்குப் பிறகுதானே, அந்தந்த வீட்டுக் குழந்தைகள்! அப்படிப்பட்ட என் அடிமையை, தாங்கள் தலையில் ஊற்றிக்கொண்டு கெளரவப்படுத்தலாமா? நீங்களே சொல்லுங்கள், கல்கடவுளாரே!

''காஃபியாரே நீர் சொல்வது ரொம்ப நியாயந்தான் அதற்கு நான் என்ன செய்வது? என் பக்தர்கள் அத்தனை பேரும் சர்வ முட்டாள்கள்! சுயநலக்காரர்கள்! அவர்கள் மட்டும் நவீன வாகனங்கள் வைத்துக்கொள்கிறார்கள். புதுசு புதுசான உடை உடுத்துகிறார்கள்; உணவு உண்கிறார்கள். எனக்கு மட்டும் எல்லாம் பழைய மாதிரியே தான் இருக்க வேண்டுமா? எனக்கும் ஒரு சூட், ஷர்ட், கோட், நெக்டை, ஹாட், பூட்ஸ், சிகரெட் முதலியவைகளைத் தரக்கூடாதா? அவர்கள் குளோப்ஜாமூன், பாதாம்கீர், பிஸ்கட், ஓவல்டின், காஃபி எல்லாம் சாப்பிடும்போது நான் மட்டும் பழைய சம்பாக் கட்டியையும் சர்க்கரைப் பொங்கலையுமே சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? அதுதான் போகட்டும். ஒரு நாளாவது இவைகளை எதையாவது என் நாக்கில் தொட்டுத் தடவியிருப்பார்களா, இப்பாவிகள்? எல்லாம் என் தலையில் தானே ஊற்றித் தொலைக்கிறார்கள்! அல்லது காலடியில் வைத்துக் காட்டிவிட்டு எடுத்துப்போய் விடுகிறார்கள், என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எல்லாம் அவன் செயல். காஃபியாரே, உங்கள் ஜாதகமே தனி ஜாதகம். மங்காத புகழ் அடைந்து விட்டீர்கள். எத்தனையோ உணவுப் பண்டங்கள் இருந்தாலும் உங்கள் பெயரால்தானே (காஃபி கிளப்) உணவு நிலையங்களுக்குப் பெயர் வைக்கிறார்கள்! என் பெயரோ, காந்தி பெயரோ, எப் பேர்ப்பட்டவர் பெயரும் எங்கேயோ அபூர்வமாகத்தானே இருக்கிறது. உங்கள் யோகமே யோகம்! என்னை இந்த நாட்டில் உண்டாக்கிய என் அருமைக்குழந்தையாகிய பிராமணர்கள்கூட காயத்ரி ஜபத்தை விட்டாலும் காஃபியை விடமாட்டார்களே! காந்தி கூட வெள்ளைக்காரனை விட அதிகமாக உங்களை வெறுத்தாரே! ஆனால் அவர்களைத்தான் விரட்ட முடிந்ததே தவிர, உங்களை அசைக்க முடிந்ததா? பிராமணர்களும் நீங்களும் ஒரே சக்தி படைத்தவர்கள்! வெறும் காட்டுக் கூச்சல் போடலாமே தவிர, இருவரையும் யாராலும் அசைக்கமுடியாது! சரி, ஒரு விஷயம் கேள்விப் பட்டீர்களா?”

"என்ன விஷயம், கல் கடவுளாரே? நமக்கு எவனாவது எதிரி கிளம்பியிருக்கிறானா? யாரவன்? சொல்லுங்கள்? ஒரே நொடியில் ஒழித்துவிடுகிறேன்.''

"இந்தியாவின் நகர்ப்புறங்களுக்காக என்று ஆண்டுதோறும் மேலும் 313 லட்சம் டன் பால் உற்பத்தி செய்வதற்காக 5 ஆண்டுத்திட்டம் ஒன்று தயாரிக்கப் பட்டிருப்பதாகவும், அதற்கு சுமார் 55 கோடி ரூபாய் செலவாகுமென்றும் விவசாய மந்திரி தவ்லத்ராம் டில்லி பார்லிமென்ட் கூட்டத்தில் பேசியிருக்கிறாரே; தெரியுமா?"

"ஹஹஹ! அற்ப மானிடப் பதர்! வேத காலத்து சோம பானத்தையருந்திய பரம்பரையின் ஆசிர்வாதத்தைப்பெற்று; பல குடும்பங்களின் இரத்தத்தைக் குடித்து, இந்த நாட்டு சர்க்கரையையும், பாலையும் என் காலின்கீழ் போட்டு மிதித்து, என்னை விரோதிப்பவர்களுக்குத் தலை வலியையும் தூக்கத்தையும் உண்டாக்கி, குடிவகைகளின் மன்னனாகவும், சர்வாதிகாரியாகவும் விளங்கிவரும் என்னிடமா இந்தச் சவால்? அது முடியாது! 313 லட்சம் டன் பால் அல்ல; ஆயிரம் கோடி டன் பால் தானாகட்டுமே! 55 கோடி ரூபாயல்ல, இந்திய சர்க்காரின் வருமானம் முழுவதுமே 308 கோடி ரூபாயையுமே - வேண்டுமானாலும் பால் உற்பத்திக்காகச் செலவிட்டுப் பார்க்கட்டுமே! முடியுமா? ஒரு ஏழைக் குழந்தை வாயில் ஒரு சொட்டுப் பால் ஊற்ற விடுவேனா? நான் யார் என்பது இந்த அற்ப இந்தியர்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அந்த மந்திரியைக் கண்டால் சொல்லுங்கள்! (நான் காண்பதுண்டுதான்; ஆனால் அவரை மதித்துப் பேசத் தயாராயில்லை) 'இந்த நாட்டில் மருந்துக்குக்கூட ஒரு சொட்டுப் பால் கிடைக்காமல் செய்வதுதான் என் இறுதி லட்சியம். அதை நிறைவேற்றாமல் நான் சாகப்போவதில்லை'யென்பதைச் சொல்லுங்கள்!''

"ஆஹா! அப்படியே சொல்கிறேன், காஃபியாரே! நானும் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்தாலும் விகிதாச்சாரம் என் தலைக்கு வந்து சேராமலா இருக்கும்! என் பக்தர்கள் ரொம்பவும் நல்லவர்கள். புத்திக்கு எப்போதுமே ஓய்வு கொடுத்திருப்பவர்கள்! நாம் இருவரும் இறுதிவரையில் ஒற்றுமையாயிருந்தால், இந்தப் பால் என்ற வெள்ளையனை இந்த நாட்டைவிட்டே விரட்ட முடியா விட்டாலும், இந்த நாட்டு மக்கள் வாயிலேயே படாமல் செய்து விடலாம். வெற்றி நமதே! பால் ஒழிக! காஃபியார் வாழ்க!''

"கல் கடவுளாரும் நீடூழி வாழ்க!'' என்று வாழ்த்துக்கூறினார், உயர்திரு காஃபியார்!

No comments:

Post a Comment