Friday, March 15, 2019

இருப்பு உலக்கையா வேணும்

"என்னாங்க, உங்களைத்தானே! அப்பளமா இடிக்க ஒரு நல்ல இருப்புலகை வாங்கியாங்கோண்ணு எத்தனை நாளா சொல்றேன்! சின்ன அரிவாமணையில் பூசணிக்காய் அறுக்க முடியலே! பெரிசா ஒண்ணு கடையிலேயிலிருந்து வரும்போது கந்தசாமி கோவிலண்டை இறங்கி வாங்கியாங்கோண்ணா, காதிலேயே போட்டுக்க மாட்டேங்கிறீங்களே!'

"ஏண்டி இது ரெண்டும் போதுமா? ஆப்பச்சட்டி, துடைப்பம், பிரிமணை, வரட்டி இதெல்லாம் வேண்டாமா? ஊரெல்லாம் தேடித் தேடி, கடைசியா, போயும் போயும் உன்னைப் பிடிச்சேனே! சாமான் வாங்கி சேர்க்கிறதிலே உன்னைப் போல எவளுமே இருக்கமாட்டாள்! வீடு முழுக்க சாமான்களையே பரப்பி வச்சிருக்கே! கால் வைக்க இடமில்லை பழைய இரும்புச்சாமான் விற்கும் கடைக்குள்ளே நுழைகிற மாதிரி இருக்கே ஒழிய, வீடு மாதிரியா வச்சிருக்கே? உடைஞ்ச பானையிலே நாலு, கிழிஞ்ச பாயிலே மூணு, ஓடிஞ்சு போன கரண்டியிலே ஏழு, ஓட்டையப்போன கரண்டியிலே ஏழு, ஓட்டையாப்போன தகர டப்பாவிலே ஓம்பது! இத்தனையும் போத தேண்ணு, இன்னொரு அரிவாமணை, இருப்புலக்கை, கல்உரல் ஏதாவது கேட்டுகிட்டே இருக்கியே!''

"அதற்கென்ன செய்யறது? குடித்தனம் பண்றதுன்னா சும்மாவா? சாமான் சட்டு இல்லாமே முடியுமா?

"போடி! போ! பொல்லாக் குடித்தனம் பண்ணிப்பிட்டே! பெரிய பெரிய வியாபாரி வீட்டிலே கூட இவ்வளவு சாமான் இருக்காதே! இந்தச் சுண்டைக்காய் மளிகைக்கடை வச்சிருக்கும் என் வீட்டிலே பாரு! மூர்மார்க்கெட் பின்பக்கம் மாதிரியே இருக்கு! வியாபாரத்திலே திடீரென்று ஏதோ கஷ்டமோ நஷ்டமோ ஏற்பட்டால் (பகவான் புண்ணி யத்திலே அப்படி ஒண்ணும் வராது) அவசரத்தில் இந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் போகக்கூட முடியாது! உன் இருப்புலக்கையையும், உரலையும், அம்மியையும், ஆட்டுக் கல்லையும் விட்டுட்டா வருவே?"

"அப்படி ஊரைவிட்டு நாம் ஏன் ஓடப்போறோம்? நல்ல லாபம் வந்துகிட்டு இருக்கிறப்போ அதைப்பற்றி ஏன் நினைக்கிறீங்கோ?''

''நஷ்டம் வந்தால் தான் ஓடணுமா? பெருத்தலாபம் வந்தால் கூட ஓடவேண்டியதுதான்! இந்த ராஜ்யத்திலே ஓடினவனுக்குத்தாண்டி ஒன்பதாம் இடத்தில் குரு! அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி! தெரியுமாடீ! கோயமுத்தூரிலே நடந்த ஒரு சங்கதியைக் கேளுடீ? ஜவஜீபாய் அப்ரலால் பட்டேல் என்று ஒரு வடக்கத்தியான் இருந்தான் லட்சக்கணக்கில் பெருத்த வியாபாரம் செய்துகிட்டு இருந்தான். வரி போடுகிற ஆசாமிகளையெல்லாம் பச்சை நோட்டாலே அடிச்சுகிட்டே 10 வருஷமா காலந் தள்ளிகிட்டு வந்தான். இந்த வருஷம் திடீருண்ணு 17,000 ரூபாய் இன்கம்டாக்ஸ் போட்டுட்டாங்க! என்ன பன்னினான் தெரியுமாடீ? நம்ம ஆளுன்னா 2 லட்சம், 4 லட்சம் இன்கம்டாக்ஸ் போடுட்டா மனசு நொந்து போயிடுவாங்க அவனுக்கென்ன? வீடா, வாசலா? நஞ்சையா, புஞ்சையா? சொந்தமா? பந்தமா? என்ன செய்தான் தெரியுமோ? கிருஷ்ண பரமாத்மாவாயிட்டாண் டீ! திடீருண்ணு மறைஞ்சே போயிட்டாண்டீ!"

"சர்க்காருலே சும்மாவா விட்டுட்டாங்க?"

"இந்த ஊர் வியாபாரிகளையின்னா சர்க்கார் மிரட்டு வாங்க! ஜப்தீம்பாங்க! அரெஸ்ட்ம்பாங்க! வடக்கித்தியான் கிட்டேயா முடியும்? அவன்தான் இந்த ஊரிலே வந்து அவன் பாஷையிலேயே கணக்கு வச்சிருக்கானே! இதெல்லாம் அவனுகள் கிட்டே ஒன்னும் முடியாதுடீ! அதிலும் இந்த ஆசாமி பேருலே கடைசியிலே "பட்டேல்"ண்ணு வருதுடீ! ஒரு ஜீவன் அவன்கிட்டே வாலாட்ட முடியுமா? இதை எதுக்குத் தெரிமா சொல்றேன்? இருப்புலக்கை கேட்டியே! அதுக்குத்தான்! திடீருண்ணு ஓடிப்போறதுக்குக்கூட நாம் தயாராயிருக்கனும்டீ! இந்த சர்க்காரிலே அது ஒண்ணுதாண்டீ வழி! சிக்கினால்தாண்டி ஆபத்து!"

No comments:

Post a Comment