Friday, March 15, 2019

ஜோதியில் கலந்தார் காந்தி!

"அவர் செத்துப்போனார்" என்று சொல்வதோ, எழுதுவதோ மங்களகரமாயில்லை என்று சொல்வார்கள்! செத்துப்போவதில் 'மங்களகரம்' எப்படியிருக்குமோ எனக்குத் தெரியாது! சாவு வீட்டில் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கலாமல்லவா? "அவர் சிவலோக ப்ராப்தியடைந்தார்" "இவர் இறைவன் திருவடி நீழலிற் சேர்ந்தார்'', "அவர் திருமால் திருவடியிற் கலந்தார்'', "இவர் துஞ்சினார்", "அவர் இறுதியான தூக்கத் திலாழ்ந்தார்''.
இப்படியெல்லாம் இறந்தவரைப் பற்றி  மங்களகரமாகச் சொல்வதுதான் சிறந்தது என்கிறார்கள்!

கள்ள மார்க்கெட் வியாபாரத்தில் ஊர்க் கொள்ளையடித்து, பலர் பணத்தைச் சுரண்டிப் பெரும் பணக்காரனாகி, உல்லாச வாழ்வு வாழ்ந்துவிட்டு உயிர் நீத்த ஒருவனை "இறைவனை திருவடி சேர்ந்தார்" என்றால், அது உண்மையா? அவர்கள் நம்பிக்கைப்படியே கூறுவதானால், ராம.சோம.பெரி.அழ.முருகு.கரு. காருண்ய செட்டியார் பங்குனி மாதம் 15-ந் தேதியன்று காலை 7 மணிக்கு திடீரென்று நரகக்குழியில் வீழ்ந்துவிட்டார்' என்றல்லவா எழுத வேண்டும்? (எந்த மதத்துக்காரரானாலும் இப்படித்தானே எழுதவேண்டும்? கள்ள மார்க்கெட்காரருக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை லாப காரர்களுக்கும் இறைவன் திருவடியில் இடங் கிடைப்பதென்றால், அந்த இடம் சென்னை ட்ராம் கார்களை விட அதிக நெருக்கடியாகவல்லவோ இருக்க வேண்டும்? இறைவனும் (காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத்தைப் போல) கள்ள மார்க்கெட்காரர்களுக்கு அபயம் தருகிறார் என்றல்லவா ஏற்பட்டுவிடும்?

இறந்து போனவர்கள் இறைவன் திருவடிக்கே நேராகப் போனாலுஞ்சரி, அல்லது போகிற பாதையில் நரகத்தில், (அதாவது தென் இந்திய ரயில்வே மூன்றாம் வகுப்பு வண்டியில்) கொஞ்ச நேரம் தங்கியிருந்து விட்டுப் போனாலுஞ்சரி! அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை! ஆனால் இறந்தவர் எப்படியிறந்தார் என்பதை மறைக்கவே கூடாது!

ஒருவர் குளத்தில் வழுக்கி விழுந்து இறந்து போயிருக்கலாம். இன்னொருவர் வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கலாம். மற்றொருவர் இந்தத் காலத்து டாக்டர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டாண்டியாகி, அதைவிட இறந்து போவதே நல்லது என்று நினைத்து, தன் சந்ததியார்கள் நன்மையைக் கருதி செத்துப் போயிருக்கலாம்! எப்படியானாலுஞ்சரி, மரணத்தின் காரணத்தை மறைப் பானேன்?

ஆனால் நம் கல்வியமைச்சர் அவர்கள் இதில் கருத்து மாறுபாடு கொண்டவராய்த் தெரிகிறது! இவர் சென்னை முத்தையா செட்டி பெண் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தாராம். ஒரு வகுப்பில் அன்றாடச் செய்திகளைத் தொகுத்து எழுதியிருந்தார்களாம். அவைகளில் ஒன்று, "காந்திஜி கொலை வழக்கு" என்பது பற்றியதாம். இதைக் கண்டாராம், கல்வி அமைச்சர். உடனே திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் வாய்மை என்பது பற்றிய குறளடிகள் நினைவுக்கு வந்தன போலும்!

"காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார் என்பதையே நாம் மறந்துவிட வேண்டும்; அதை யாருக்கும் கற்பிக்கக்கூடாது" என்று கூறினாராம்!

ஏனய்யா மறந்துவிடவேண்டும்? கல்விக்கரையைக் கண்ட அமைச்சர் அவர்களே, ஏன்? பிரிட்டிஷ் மன்னன் முதலாவது சார்லஸ் என்பவன் ஜனநாயகத்தினால் தூக்கிலிடப்பட்டான் என்பதை மறந்துவிட்டதா உலகம்?
சாக்ரட்டீசுக்கு நஞ்சு தந்து கொன்றார்கள், கிரீஸ் நாட்டுக் கயவர்கள், என்பதை மறந்து விட்டதா, உலகம்? அப்ரஹாம் லிங்கன் துரோகி ஒருவனால் கொல்லப்பட்டான் என்பதை மறந்து விட்டதா, உலகம்? சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் மேலிடத்தின் துரோகச் செயலால் நாட்டை விட்டு ஓடி, எங்கேயோ அநாதியாக மாண்டார் என்பதை மறந்து விட்டதா, உலகம்? ஹிட்லர் எதிரியிடம் கைதியாயிருப்பதைக் காட்டிலும் இறப்பதே நல்லது என்ற முடிவால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மறந்து விட்டதா, உலகம்?
காந்தியாரை கோட்ஸே என்ற பார்ப்பனன் மதவெறி காரணமாகக் கொன்று விட்டான், என்பதை நாம் ஏன் மறக்கவேண்டும்? அந்த மதத்தில் பிறந்திருக்கும் அவமானத்திற்காகவா? அதற்காக உண்மையை மறைக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!

இப்போதேதான் அநேகமாக எல்லோருமே மறந்து விட்டார்களே! கோழி திருடிகளும் கூடக் குலாவி, கோரமான அந்தப் படுகொலையை அடியோடு மறக்குமாறு செய்து, சாம்பல் கரைப்பு விழாவும் செய்துவிட்டார்களே!

இனி, அடுத்தபடி காந்தி புராணம் எழுத வேண்டியது தானே பாக்கி. அதில் இராமலிங்க அடிகள் நடராஜ ஜோதியில் கலந்தது போலவும்,

"காந்தியார் ஜோதியில் கலந்துவிட்டார்! இறைவனே கோட்ஸே உருவத்தில் வந்து அவரது அபார சேவையை மெச்சி, தம் பாதார விந்தத்துக்கு அழைத்துச் சென்றார்" 

என்று எழுதவேண்டிய ஒன்றுதானே பாக்கி! 1948-ல் நடந்த சம்பவத்திலேயே இவ்வளவு பித்தலாட்டாம் என்றால், பண்டை நாட்களில் அசுரர்களைப் பற்றி கூறியிருப்பதெல்லாம் எவ்வளவு தூரம் "காங்கிரசா"யிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்!

No comments:

Post a Comment