Saturday, March 9, 2019

மாஜி மஞ்சள் பெட்டிகள் மகஜர்

கார்மேகக் கருணை நிறைந்த வருணனே! நமஸ்தே !

 இந்த மகஜரை உங்கள் முன்பு சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் நிரபராதிகள். அதாவது நன்மையோ, தீமையோ எதுவும் செய்யாதவர்கள். செய்யவே தெரியாதவர் கள். உங்களிடங்கூட உண்மையை மறைக்கலாமா? எங்களுக்கு வாய்ச்சவடால் அடிக்கவும், பேனாமுனை போனபடி எழுதவுந்தான் தெரியும். வேறெதுவும் செய்து பழக்கமேயில்லை. கட்டிய வீட்டுக் கோளாறு சொல்லியே காலங்கடத்தி விட்டோம். ஒரு செங்கல்லைக் கூடக் கையால் தொட்டு அறியோம். இடையிடையே கொஞ்சம் அழிவு வேலையும் பழகியுள்ளோம். ஆகையால் சுவரை இடித்துத்தள்ள முடியாவிட்டாலும் வீணாக்கவாவது தெரியும். வெட்கமின்றி உங்களிடம் உண்மையைக் கூறுகிறோம்.

நாங்கள் அந்தக் காலத்தில், எங்களுக்கிருந்த அவசரத்திலும், ஆத்திரத்திலும் எதை எதையோ புளுகிவிட்டோம்!

நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஒடும் என்றோம். இன்று பணம் கொடுத்தால் கூட ஒரு அவுன்ஸ் சுத்தத்தேனோ, சுத்தப் பாலோ கிடைப்பதில்லை.

வரிகளையே அடியோடு ஒழித்துக் கட்டப்போவதாகச் சொன்னோம். இன்று இனிமேல் போடக்கூடிய புது வரியைப் பற்றிச் சொல்கிறவர்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசு தரக்கூடத் தயாராயிருக்கிறோம்.

அன்று தற்குறித்தனத்தை ஒரே நொடியில் (காளி கம்பன் நாக்கில் எழுதியது போல) ஒழிக்கப்போவதாகச் சொன்னோம். இன்று ஆசிரியர் கிடைக்கவில்லை; பள்ளிகளில் இட மில்லை; புதுப்பள்ளி கட்டப் பணமில்லை. ஆரம்பப் பள்ளி மூடுவிழா கூட நடத்தி வருகிறோம்!

அன்று ஜாதிகளை ஒழிக்கப் போவதாகத் தம்பட்ட மடித்தோம்! இன்று பட்டியலில் இடம்பெறவேண்டிய ‘வோட் டர்கள்' தங்கள் ஜாதிகளைக் குறிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம்.

அன்று கார்டு விலையைக் காலணாவாக்கப் போவதாகச் சொன்னோம். இன்று அதைப்பற்றி நினைவூட்டுகிறவைனக் கண்டாலே அடிவயிற்றைக் கலக்குகிறது.

இந்த மாதிரியே இன்னும் 700 உதாரணங்கள் சொல்ல முடியும். ஆனால் பல நாடுகளுக்குச் செல்லவேண்டிய தங்களுக்குத் தொல்லை தரக்கூடாதேயென்று கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

எங்கள் பரிதாபமான நிலைமையைக் கண்டு தாங்களாவது மனமிரங்கி பேருதவி புரிய வேண்டும். தாங்களும் இச்சமயம் எங்கள் காலை வாரிவிடுவது முறையல்ல, பகவானே!

நாங்கள் அந்தக்காலத்தில் உறுதி கூறிய அனந்த கோடி விஷயங்களில் தங்களைப்பற்றிய விஷயமும் ஒன்றுண்டு.

மாதம் மும்மாரி பொழியச் செய்வோம், என்று சொல்லித் தொலைத்தோமல்லவா? ஆனால் நாங்கள் வந்தது முதல் மழை பன்னீரைவிட அபூர்வமாயிருக்கிறதே! நீங்களுமா இப்படி எங்களை எதிர்பார்ப்பது? புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் மண்டையுடைக்கும் வெய்யில் இதற்கு முன்பு இருந்ததேயில்லையே. பயிர் பச்சையெல்லாம் வாடுகின் றனவே. கொஞ்சம் கிருபை செய்யக்கூடாதா? ரஷ்யாவைப்போல, அமெரிக்காவைப் போல, ஆஸ்ட்ரேலியாவைப் போல நாங்கள் பலாத்காரத்தில் இறங்குகிறோமா? அந்த நாட்டார்களெல்லாம் விமானத்தில் ஏறிச் சென்று மேகங்களை விரட்டி பனிக்கட்டிகளையும், மருந்துகளையும் தூவி மழை பெய்யச் செய்கிறார்களே! அப்படியெல்லாம் நாங்கள் செய்வதில்லையே; நாங்கள் (தங்கள் விஷயத்திலாவது) அஹிம்சாவாதிகளல்லவா? தங்களுக்குத் தெரியாதா? பிராமணர்களை விட்டு வருண ஜெபம் பண்ணச் சொன்னோமே. அதையும் தாங்கள் அலட்சியப்படுத்தி விட்டீர்களே! தாங்கள் கூடவா சூனாமானா ஆகிவிட்டீர்கள்?

 தயவுகூர்ந்து இந்த ஒரு விஷயத்திலாவது எங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு அருள் புரிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். போனது போகட்டும். இனிமேலாவது கொஞ்சம் மழை பெய்யுமாறு செய்யுங்கள். இந்த உதவியை என்றும் மறக்கமாட்டோம். வேண்டுமானால் மத்திய சர்க்காரில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் தங்களை ‘மழை மந்திரி’யாக நியமிக்கச் சொல்கிறோம்! அங்கு எவ்வளவோ பணம் கொள்ளை போகிறதே; அதில் தங்களுக்கு கொடுப்பதிலா குறைந்துவிடப்போகிறது! அது மட்டுமல்ல, மோட்டாரில்லாத சட்டசபை மெம்பர்களுக்குக் கிடைக்கும் பெட்ரோல் கூப்பன்களில் வேண்டுமளவு தங்களுக்குத் தருகிறோம். அவைகளை நீங்களும் காலன் ஒன்றுக்கு 6 ரூபா 8 ரூபா வீதம் கள்ள மார்க்கெட்டில் விற்றுக் கொள்ளலாம்! எங்கள் தயவிருந்தால் நீங்கள் என் றும் பிழைத்துக் கொள்ளலாம். தங்களை மிரட்டுவதாகத் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். ஜெய் ஹிந்த்!

தங்கள் பதிலைச் செய்கை மூலம் விரைவில் பார்க்க விரும்பும்…

மாஜி மஞ்சள் பெட்டிகள்
(காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் 1946ல்)

No comments:

Post a Comment