Monday, March 11, 2019

பூனையும் அதன் குட்டிகளும்

இடம்: கும்பகோண மகாமளக் குளத்தின் படிக்கட்டு
காலம் : அதிகாலை 5 மணி
பாத்திரங்கள் : பூனைக்கண் அய்யங்காரும் அவர் மகன் ஆஞ்சனேயனும் 

***

ஆஞ்சனேயன்: அப்பா, நீ என்னதான் சொல்றே? என்னை ஏன் கட்டாயப்படுத்துறே? சர்க்காருக்கு விரோதமா கலவரஞ் செய்கிற கட்சியிலே இருந்தா சர்க்கார் சும்மா விடுவாளா? பட்டேலும், நேருவும் பேசியிருக்கிறதைப் படிச்சியேன்னோ? கட்டாயம் எங்களை அடியோடு ஒழிச்சுட்டுத்தான் மறுவேலை பார்க்கப்போறதா சொல்லிப்பிட்டாளே! இனிமேல் நான் அவாளோட சேரவேமாட்டேன்.

பூனைக்கண் அய்யங்கார்: போடா, மண்டு! நோக்கு என்ன தெரியும்? நீ சின்னப் பயல்தானே. நேருவாவது, பட்டேலாவது? நானா இந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயப்படுகிறவன்? நாங்களெல்லாம் பெரிய 'ப்ளான்' போட்டு வேலை செய்கிறோம்டா! நான் சொன்னபடியே செய்யடா, போ.

ஆஞ்ச: என்னப்பா, இந்த மாதிரி சொல்றே. 2 வருஷத்துக்கு முன்னே காங்கிரஸ், காங்கிரஸ்னு அடிச்சிண்டே, ரெண்டு வருஷமா ஹிந்து மகா சபைன்னு சொல்லிண்டிருக்கே. ஆனால் என்னை மட்டும் ஆர்.எஸ்.எஸ்.லே சேர்த்துட்டு நம்ப சர்க்காரோடே சண்டைக்குப் போகச் சொல்றே! நீ மட்டும் இங்கிலீஷ் படிச்சுட்டு வக்கீல் தொழில செஞ்சிண்டிருக்கே; ஒண்ணுக்கொ முரணாயிருக்கே!

பூனை: நம்ப சர்க்காரா? எதுடா நம்ப சர்க்கார்? போடா முட்டாள். நானா முன்னுக்குப் பின் முரணா நடக்கிறேன்? நோக்கு லோக விவகாரம் தெரிஞ்சான்னா? நம்பளவாளிலே பெரியவாளெல்லாம் கூடி ஒரு முடிவு செஞ்சிருக்கோம். ஒரு பிரம்மாண்டமான இரகசியத் திட்டம் போட்டிருக்கோம். இப்படி கிட்ட வாடா, யாராவது கேட்டுண்டிருக்கப் போறா! வெள்ளைக்காரனை விரட்ட ணுமின்னு சொன்னோமே, எதுக்காகத் தெரியுமோ? அவன்களோடெ படிப்பு, ஆசாரம், நாகரீகம் எல்லாம் வந்துதான் சூத்திரன்களுக்கு நம்மிடமிருந்த பக்தி, பயம், மரியாதை இதெல்லாம் குறைய ஆரம்பிச்சுது. நாம் எதையெதையெல்லாம் அற்புதம், கடவுள் லீலைகள், விதியின் விளையாட்டு என்று சொல்லி வந்தோமோ அவைகளையெல்லாம் விஞ்ஞானக் கல்வியின் மூலம் அவன் பாழாக்கிட்டான். அவனும் நம்மை தனக்கு பிரயோஜனப்படுத்திண்டானே தவிர, நம்மிடத்தில் பயமோ, பக்தியோ இல்லாமலே இருந்தான். ஆகையால் அவனை ஒழிச்சோம். இப்போது சுயராஜ்யம் கிடைத்துடுத்து. இதை எப்படியாவது ஹிந்து ராஜ்யமாக்க வேண்டும். பழைய பீஷ்வாக்கள் ராஜ்யமாக ஆக்கப் போறோம். அதுக்காகத்தான் ஹிந்து மதத்தை சர்க்கார் நிர்வாகத்தின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புகுத்தீண்டே இருக்கோம். நல்ல வேளை பார்த்து சுதந்தரம் வாங்கச் சொன்னோம். தேங்காய் உடைத்து பூஜை செய்து முதல் கப்பலை மிதக்க விடச் செய்தோம். தெரிஞ்சுதா, நன்னா கவனீடா!

ஆஞ்ச: அப்படீன்னா, இந்த சர்க்காரை நாமெல்லாம் ஆதரிக்க வேண்டாமா?

பூனை: அவசரப்படாதேடா! மத்திய சர்க்காரைப் பொறுத்தமட்டில் அங்கே துலுக்காள் - ஹிந்துக்கள் சண்டை அதிகமோன்னோ; அங்கே நம்ப ஹிந்து ராஜ்யத்திற்கு விரோதமாயிருக்கிறவன் யாராயிருந்தாலுஞ்சரி, அவன் எவ்வளவு பெரிய மகாத்மாவானலுஞ்சரி, அவனைத் தீர்த்துக் கட்டிப்பிடுவா நம்பளவா. இங்கே, நம் மாகாணத்தைப் பொறுத்தவரையிலே சொல்றேன், கேள். இனிமேல் காங்கிரசுக்குள்ளே பிராமணாளுக்கு இடமே இல்லை! ஆனானப்பட்ட ஆச்சாரியாரையே துரத்தி விட்டான்களே, இவன்கள்? பாக்கிப் பேரை மட்டும் விடவா போறான்கள்? அதனால் தான் சூத்திரப்பயல்கள் நிறைஞ்சுபோன காங்கிரசை விட்டு நாங்கள் விலகீண்டோம் வெளிப்படையாக ஏதோ ஆதரிப்பதுபோல் வேஷம் போடுவோமே தவிர, உள்ளூர அதைக்குழி தோண்டிப் புதைப்பது தான் எங்கள் திட்டம். அதற்காகத்தான் உங்களை ஆர்.எஸ்.எஸ். இல் சேர்த்துவிட்டு நாங்கள் பின்னாலிருந்து வேலை செய்துண்டிருக்கோம். நாம் எடுத்த காரியம் எதுவும் வீணாய்ப் போனதில்லை. தெரியுமா? இதோ, பார்! இந்த சர்க்காருக்கும் திராவிட கட்சி ஆள்களுக்கும் சிண்டு முடிஞ்சு விட்டுட்டோம்.  நம்ப ஊரிலேயே நன்னா நாயடிக்கிறாப்போலே அடிச்சான்களா, இல்லையா, அந்த திராவிட கட்சிக்காரன்களை! இனிமேல் இவன்களெல்லாம் சென்னை சர்க்கார்மேல் பாய்வான்கள், அவாளுக்கும் இவன்கள் மேல் கோபம் வரும்! இரண்டு ஆடுகளும் மடார் மடார் என்று எம்பி எம்பி முட்டிக்கொள்ளுப் போகுதுகுள்! இரத்தம் சொட்டும்; நாம் வாழை இலைத் தொன்னையில் பிடித்து வயிறு நிறையக் குடிக்கப்போறோம்.

ஆஞ்ச: நாம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பது என்றைக்காவது தெரியாமலா போய்விடும்? தெரிஞ்சண்டா, அப்புறம் நாம் என்ன செய்யறது?

பூனை : அதுதானே நடக்காது. இராமாயணத்திலே படிச்சதில்லை, நீ? வானர சேனையும் ராட்சத சேனையுந் தான் கோடி கோடியாக செத்து மடிஞ்சுதே தவிர, நம்பளவா ரிஷிகளிலே யாருக்காவது ஒரு தாடி மயிராவது உதிர்ந்ததாகப் படிச்சிருக்கியா? பரம்பரை பரம்பரையாய் நம்பௗவா இதிலே கைதேர்ந்த நிபுணாள் என்பது நோக்குத் தெரியாதோ? நோக்கு அனுபவம் போதாதுடா! இந்த ஹிந்தி விஷயத்தைத்தான் பாரேன்! ஒரு அவினாசி, ஒரு பக்தவச்சலம், ஒரு மாதவ மேனன், ஒரு அண்ணாமலை, ஒரு வேதரத்தினம், ஒரு சொக்கலிங்கம், ஒரு காமராஜன் - இந்த மாதிரி அவன்களையேதானே தயார் பண்ணிவிட்டு, இந்த திராவிடக் கட்சிக்காரன்களைத் திட்டச் செய்திருக்கிறோம். நம்பளவாளிலே வைத்திநாதய்யரோ, மந்திரி ராஜனோ, பாஷ்யமய்யங்காரோ, ரா. கிருஷ்ண மூர்த்தி அய்யரோ, ஹிந்து 'சீனுவாசய்யங்காரோ', 'தினமணி' சிவராமய்யரோ, யாராவது ஹிந்தி எதிர்ப்புக்காரன்களோடே மோதுகிறார்களா, யோசித்துப் பாரு! அவனுக ஜாதியைச் சேர்ந்த போலீசை விட்டே அவன்களை அடிக்கச் சொல்றோமே, பார்த்தியா? இதுதாண்டா சாமர்த்தியம்! அந்தப் பயலுகள் போட்டி போட்டுண்டு கோவில் கட்டினா, நாம் அதைப் பிடிச்சுக்குவோம்! அவன்கள் கஷ்டப்பட்டு குளம் வெட்டினால் நாம் அதில் குளிப்போம்; வெட்டின பயல்களையே அதில் குளிக்க விடமாட்டோம்! நம்மை ஜெயிக்க யாராலும் முடியாதுடா. இந்தப் பயலுகள் ஒண்ணு சேராமல் மட்டும் நாம் வெகுஜாக்கிரதையா பார்த்துக்கணும், தெரிஞ்சுதா? சரி, நேரமாச்சு. நீ போய் நான் சொன்ன காரியத்தை முடிச்சுகிட்டு அப்புறம் ஸ்கூலுக்குப் போ. ஆமா, மகஜரிலே கையெழுத்து வாங்கீட்டியோ? சீக்கிரம் கட்டும்! 4-5 பேருகிட்டே வாங்கினால் போதும். மிச்சக் கையழுத்தெல்லாம் நீயும், நானுமே போட்டுடலாம்!

(கும்பகோணத்தில் மட்டுமல்ல; எந்த ஊரிலும் அக்கிரகாரத்தில் இந்த மாதிரிப் பேச்சுத்தான். அக்கிரகாரப் பூனைகள் ராஜபாளையம் நாய்களைப்பற்றி இந்த மாதிரிப் பேசிக்கொண்டிருக்கின்றன! பகிரங்கமாய் அல்ல; படிக்கட்டுகளில் அமர்ந்து!)

No comments:

Post a Comment