Tuesday, March 12, 2019

அய்யங்கார் ரயில்வே!

தென் இந்திய ரயில்வே, எம்.எஸ்.எம்.ரயில்வே, மைசூர் ரயில்வே - ஆகிய மூன்று ரயில்வேக்களையும் இன்று முதல் சேர்த்து ஒன்றாக இணைத்துவிட்டார்கள். இணைக்கப்பட்ட ரயில்வேக்கு தென்பகுதி ரயில்வே என்ற பொதுப்பெயர் தரப்பட்டிருக்கிறது. இதற்கு ராமானுஜ ஐயங்கார் ஜெனரல் மேனேஜராக இருப்பாராம். அதாவது மூன்று ரயில்வேக்களுக்கும் சேர்த்து!

மூன்று கோடுகள் சேர்ந்து நெற்றியில் நிற்பதை 'நாமம்' என்கிறோம். அதைத் தரிக்கின்ற பார்ப்பனர்களை அய்யங்கார் என்கிறோம். ஆதலால் ராமானுஜ அய்யங்கார் மூன்று ரயில்வேக்களுக்கும் பொதுவான ரயில்வேக்கு மானேஜராக வருவது பொருத்தமேயாகும்! வடகலைக்குப் பதிலாக தென்கலை நாமதாரியாக இருந்திருந்தால் இன்னும் அதிகப் பொருத்தமாயிருந்திருக்கும்.

அய்யங்கார் அதிகாரமேற்கும் இந்த பட்டாபிஷேக வைபவம் இன்று மாலை நடைபெற போகிறது. இதற்கு மாமனார் (அதாவது பட்டஞ்சூட்டிக் கொள்கிறவரின் மாமனார்) கோபால்சாமி அய்யங்காரும் அவரது ‘கோட்டா' மந்திரி சந்தானமய்யங்காரும் வந்து சிறப்பிக்கப் போகின்றனர்!
ஏதோ குடும்ப விஷயம் என்று பொதுமக்கள் கருதி அலட்சியமாயிருந்து விடாமலிப்பதற்காக பலருக்கு (நான் உட்பட) அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஒரு அய்யங்கார் அதிகாரத்தில் மூன்று ரயில்வேக்கள்! அவருக்கு மேலேயுள்ள மந்திரியும் அவர் மாமனார், உதவி மந்திரியும் மற்றொரு அய்யங்கார்! இனிமேல் என்ன குறைவு? இதற்குமேல் வேறென்ன வேண்டும்.

Great Southern Railway (G.S.R) ஜி.எஸ்.ஆர். என்று பெயரிட்டால் இன்னும் பொருத்தமாயிருக்கும் என்று மதுரை தோழர் ஒருவர் எழுதியிருக்கிறார். அவரே அதற்கு விளக்கமும் எழுதியிருக்கிறார். 'G' என்பது கோபால்சாமி அய்யங்கார். S-என்பது சந்தானமய்யங்கார் 'R' என்பது ராமானுஜ அய்யங்கார்! தோழரின் மூளை எப்படி வேலை செய்கிறது, பார்த்தீர்களா?

அய்யங்கார் குஞ்சுகளில் இனிமேல் ஒன்று கூட வேலையில்லாமல் சும்மாயிருக்காது. எல்லா உருப்படிகளுக்கும் அய்யங்கார் ரயில்வேயில் இடம் கிடைத்து விடும். மற்றவர்களுக்கு போர்ட்டர் வேலைதான் கிடைக் கும்! ‘காக்கா' பிடிக்கிறவர்களாயிருந்தால் “பாயின்ட்ஸ் மென்” வேலை கிடைக்கலாம்.

இன்று தமிழ் வருஷப் பிறப்பல்லவா? அதாவது அப்படிச் சொல்லப்படுகிறதல்லவா? இன்று அய்யங்கார் உலகத்துக்கு ஒரு புனிதமான நாள். மகாவிஷ்ணுவே அவதரித்தாலும் கூட அவரால் அய்யங்கார்களுக்கு செய்ய முடிகிறதை விட அதிகமாக இந்த முன்று அய்யங்கார்களும் செய்து விடுவார்கள்! போதாக்குறைக்கு ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவும்’ (ஹிந்து) பக்க பலமாக இருக்கிறது.

லால்குடியிலிருந்து திருச்சி ஜங்ஷனுக்குப் போய்க் கொண்டிருக்கும் ரயில்வே உத்தியோகஸ்தர் வண்டியில் நாள்தோறும் பக்க வாத்தியங்களுடன் பஜனை நடந்து கொண்டிருக்கிறது, பல ஆண்டுகளாக! இனிமேல் மைசூர் ரயில்வேயிலும், எம்.எஸ்.எம்.ரயில்வேயிலும் நடக்கும்.

விட்டலே, விட்டலே, பாண்டுரங்க விட்டலே!
கோபால விட்டலே, சந்தான விட்டலே!
ராமானுஜ விட்டலே, விட்டலே! விட்டலே!

என்று பஜனை செய்யலாம் ரயில்வே இலாகாவில் புக வேண்டுமென்று விரும்புகின்ற பக்தர்கள். 

அய்யர்கள் கூட அய்யங்கார் ஆகவேண்டிய காலம் வரப்போகிறது! ஆனால் யார் எவரானாலும் திராவிடன் மட்டும் பார்ப்பானாக முடியாதே! ஒரே நிமிஷத்தில் முஸ்லீம் ஆகலாம்! ஒரே நிமிஷத்தில் கிறிஸ்துவனாகலாம்! ஒரே நிமிஷத்தில் பவுத்தன் ஆகலாம். ஆனால் ஏழு பிறவிக்குப் பிறகல்லவா பிராமணனாக முடியும்! அதுவும் தொடர்ந்து பிராமண விசுவாசியாயிருந்தாலல்லவோ ?

ஆகஸ்ட் சுதந்திரம் யாருக்கு வந்திருக்கிறது, பார்த்தீர்களா?

விடுதலை 14.4.1951

No comments:

Post a Comment