Friday, March 15, 2019

வரும்படியைப் பெருக்கும் வழி

இந்தத் தலைப்பைக் கொண்டதாக 200 பக்கத்தில் ஒரு புத்தகம் எழுதினால், உள்ளே விஷயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தலைப்புக்காக மட்டுமே பத்தாயிரம் புத்தகங்கள் விற்கும்! அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பல்லையுடைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பேஷாகச் செய்யலாம்!
 

அதைப் பற்றியல்ல, நான் எழுதப்போவது! கண் வைத்தியர்கள் தங்களுக்கு வருமானம் குறைவதாகப் புகார் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மீது இரக்கப்படுவதா? வேண்டாமா? கண் பார்வை சரியாயிருப்பதானால் கண் வைத்தியர்களிடம் ' பலர் வருவதில்லை; இது மகிழ்ச்சிக்குரியதுதானே, என்று நினைக்கிறார்களா?
 

உடனே கண் டாக்டர்கள் பத்திரிகாசியர்களிடம் சரண் புகலாம். கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறு எழுத்துக்களாகத் கோர்த்து நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் பேர்களின் கண்களையாவது கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்! (கேட்டுக் கொள்ளாமலே இந்தத் திருப்பணி இப்போது நடைபெற்று வருகிறது! எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால், 12 பாயின்ட் (Point) எழுத்துக்குக் குறைந்த எந்த எழுத்துமே வார்க்கக்கூடாது என்று உத்தரவு போட்டு விடுவேன்) பத்திரிகை நிர்வாகிகள் மட்டுமா? சினிமாக்காரர்களைத் தூண்டி விட்டு தினம் 4 காட்சிகள் காட்டச் செய்யலாம்! இந்த மாதிரி எத்தனையோ உதவிகள்!
 

வக்கீல்கள் வரும்படி குறைவதாகப் புகார் செய்தால் என்ன செய்வது?
வம்புச்சண்டைகளை வளர்த்துவிடலாம். போலீஸ்காரர்களிடம் சொல்லி வழியில் போகிறவர்களையெல்லாம் கைது செய்யச் சொல்லிப் பார்க்கலாம். நெருங்கிய நண்பர்களாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பணம் கடன் கொடுக்க ஆரம்பிக்கலாம்!
திருடர்கள் தங்கள் வரும்படி குறைந்திருக்கிறது என்று புகார் செய்தால் என்ன செய்வது?
 

இரவில் தெருக் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கலாம். கோயில் திருவிழாக்கள், கண்காட்சிகள் முதலியவைகளை அதிகப்படுத்தலாம்! பெண்களுக்கு இரவல் நகையை வாங்கிப்போட்டாவது திருவிழாக்களுக்கு அனுப்பி வைக்கலாம்! தென் இந்திய ரயில்வேக்காரர்களுக்கு எழுதி மூன்றாம் வகுப்பு வண்டிகளை இன்னும் குறைக்கச் சொல்லலாம்! ஆனால் இவர்களெல்லாம் சர்க்காரிடமே தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்வார்களேயானால், சர்க்கார் இம்மாதிரி உதவிகளைச் செய்து தருவார்களா? தருவார்கள் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
 

ஏனென்றால் தமிழ்நாடு தேவாலய அர்ச்சகர்கள் சங்க முதலாவது மாநாடு 12.11.48ல் கும்பகோணம் தாலுக்கா திருநாகேஸ்வரத்தில் நடைபெற்றதாம். அதில் கீழ்க்கண்டபடி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதாம்.
 

“தற்காலம் ஆலயங்களில் நம் சமூகத்தினர்களுக்கு வருமானம் போதுமான அளவில் இல்லாதபடியால் அதிகப்படி வருமானம் கிடைக்கும் அளவில் வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கிறது”
 

எப்படியிருக்கிறது தீர்மானம், படித்தீர்களா? அர்ச்சகர்களுக்குப் போதுமான வருமானம் இல்லையாம்! சர்க்கார் உதவி செய்ய வேண்டுமாம்! கல்லூரிகளையும், பள்ளிகளையும் இடித்துவிட்டு கோவில்களாகக் கட்டலாம்! மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகளையெல்லாம் உடைத்து ஒரு பெரிய தேர் கட்டி வைக்கலாம்! ஆஸ்பத்திரிகளை இடித்துவிட்டு அநுமார் கோவில்கள் கட்டலாம்! அவர் சஞ்சீவி இலையைக் கொண்டு வந்து செத்தவர்களையே உயிர்ப்பிக்கக்கூடியவரல்லவா? மேலும், இப்போதுள்ள டாக்டர்கள் என்றைக்கிருந்தாலும் சாகக்கூடியவர்கள் தானே! ஆனால் சஞ்சீவி மருந்து டாக்டர் அநுமான் சிரஞ்சீவி அல்லவா? மேலும், சென்னை ரிக்ஷா வண்டி ஸ்டாண்டுகளில் முளைக்கும் சிறு செங்கல் "சாமி" களுக்குப் பதிலாக கருங்கல் சாமிகளை வைத்து அவைகளைச் சுற்றிக் கோவில் கட்டலாம்! சென்னை எழும்பூர் ம்யூசியத்தில் பல கற்சிலைகள் ("சாமிகள்") இருப்பதனால், அந்த ம்யூசியத்தை ஒரு பெரிய கோவிலாகக் கட்டி, அதற்குள் சில அர்ச்சகர்களை விரட்டலாம்! ரோடு ஓரத்திலுள்ள மைல் கற்களையெல்லாம் லிங்க உருவத்தில் மாற்றியமைத்து, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்ச்சகரை நிறுத்திவைக்கலாம்! அவைகளுக்கு "மைல் நாதர்'' என்று பெயரிட்டு, பண்டார சந்நிதிகளிடம் பணம் வாங்கி, ஸ்தல புராணம் பாடச் செய்யலாம்! திருவண்ணாமலையில் ஒரு விதவை அம்மாமி பெயரால் பல லட்சத்தில் கோவில் கட்டும்போது, மைல் கல்லுக்கு ஸ்தல புராணம் பாடுவது தவறாகுமா? அர்ச்சகர்கள் என் யோசனைகளை சர்க்காருக்கு அனுப்புவதுடன், அடுத்த மாநாட்டுக்கு என்னைத் தலைவராக வைத்தால், இன்னும் பல அருமையான திட்டங்களைச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்! 

அர்ச்சகர்கள் வருமானத்தைக் குறையும்படிச் செய்தவர்கள் யார் யாரோ அவர்களையெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன். அர்ச்சகர்களே! அஞ்சாதீர்கள். ஆனால் ஓய்வு நேரத்தில் உழுவதற்கோ கல் உடைப்பதற்கோ கற்று வையுங்கள்; என் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு.

No comments:

Post a Comment