Thursday, March 7, 2019

மதுரை மீனாட்சியம்மாள் என் முன்பு தோன்றினாள்

திருமதி மதுரை மீனாட்சியம்மாள் அவர்கள் என் முன்பு தோன்றினாள் பின்வருமாறு பேசினாள்.

மதுரைப் பள்ளிக்கூடம் ஒன்றின் மேல் மாடி திடீரென்று இடிந்து விழுந்தமையால் முப்பது குழந்தைகளுக்கு மேல் இறக்க நேரிட்டதற்காக நான் இன்றும் மனவேதனைப் பட்டுக் கொண்டேயிருக்கிறேன். இந்தச் சமயத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி என்னைக் கேலி செய்வது போலிருந்தது. அதாவது, மீதிக் குழந்தைகள் பிழைத்தமைக்காக எனக்கு அர்ச்சனை செய்து நன்றி செலுத்தினார்கள், என் பக்தர்கள்.

 நான் சிறிது முன் யோசனையுடன் நடந் திருந்தால் அந்தக் கட்டடம் பகலில் இடியாதபடி இரவில் இடிந்து விழுமாறு செய்திருக்கலாம்! அப்போது ஒரு சாவுகூட நிகழ்ந்திருக்காது. அல்லது நகர எஞ்சினியர்கள் மனதில் முன்கூட்டியே புகுந்து, அந்தக் கட்டடத்தில் பள்ளி நடத்த அனுமதி தராதபடி செய்திருக்கலாம்! அல்லது, "தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்'' என்று அடிக்கடி சொல்கிறார்களே, அதுபோல், செத்துப்போன குழந்தைகளையும், "தெய்வாதீனமாக" தப்பியிருக்கும்படி அவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகு இடித்துத் தள்ளியிருக்கலாம்! பெரியவர்களாவது "பாவிகள்" (கிறிஸ்துவப் பிரசாரகர் அடிக்கடி கூறுவது போல)! அவர்கள் செய்த செய்கின்ற பாவங்களுக்காக இம்மாதிரி மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை! ஆனால் ஒரு பாவமும் செய்யாத, குற்றம் என்றால் என்ன என்றே தெரியாத - கடவுள் நம்பிக்கையில் கடுகளவும் அப்பழுக்கில்லாத - பிஞ்சுகளை நசுக்கிக் கொல்வதென் றால், என்ன அக்கிரமம்!

கண்ணகிகூட குழந்தைகளை நீக்கி மற்றவர்களைத்தானே மதுரைத் தீயில் எரியும்படி செய்தாளாம்!  நான் அவளைவிடக் கேவலமாக நடந்திருக்கக்கூடாது தான்! இப்படியெல்லாம் நான் மனவேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது உயிர் பிழைத்த குழந்தைகளுக்காக என் பக்தர்கள் எனக்கு நன்றி செலுத்துவதென்றால், உயிர் துடித்து செத்துப்போன குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பாளி? நான்தானே?
இதுதான் மீனாட்சியம்மாள் மனக்குறையின் சாரம்!

இதோ இன்னொரு செய்தி: நமது முதலமைச்சர் கார் விபத்துக்குள்ளாகி கை முறிந்து, சிகிச்சை பெற்று குணமடைந்தமைக்காக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வட பழனியாண்டவனுக்கு தனிச் சிறப்பான அர்ச்சனை நடந்ததாம்! காங்கிரஸ் கமிட்டிகளில் இந்த மத பக்தர்களைத் தவிர, மற்ற அஜீஸ்களுக்கும், வின்சென்ட்களுக்கும், நாத்திகருக்கும் என்ன வேலை என்று கேட்பது ஒரு புறமிருக்கட்டும்.


வடபழனியாண்டவனால்தான் (ஜெனரல் ஆஸ்பத்திரி டாக்டர்களால் அல்ல!) முதலமைச்சர் கை முறிவு முழு குணமடைந்தது என்பது உலகறிந்த சங்கதி! பழனியாண் டவனே டாக்டராகவும், நர்சாகவும் வந்த இரவு பகலாக இரண்டு மாதம் பாடுபட்டதை நானே கண்முன்பு கண் டேன்!

ஆனால் அதே பழனியாண்டவன் என்னிடம் கூறியது என்ன தெரியுமா?

"நான் சிறிது அலட்சியமாயில்லாமலிருந்தால், என் பக்தருக்கு இந்த கார் விபத்து ஏற்படாமலே தடுத்திருக்க முடியும். இவர் காரையே ஒரு மணி முன்னர் அல்லது பின்னர் செல்லும்படியாகச் செய்திருக்க முடியும். அல்லது எத்தனையோ விபத்துகளில் கூறப்படுவதுபோல் தெய் வாதீனமாக ஒரு சிறு காயமும் இன்றி தப்பித்தார் என்று செய்தி வரும்படியாகச் செய்திருக்க முடியும் எனது பரம பக்தரையே இப்படிச் செய்தது தவறுதான், இதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தக் குற்றத்தை இடித்துக் காட்டுவது போல் எனக்கு அர்ச்சனை செய்வது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை!"

அறிவுப்பாதை 11.9.64

No comments:

Post a Comment