Thursday, March 7, 2019

வேண்டாம் தொல்லை!

இதென்ன விபரீதம்! மாலாசின்ஹா : வைஜயந்திமாலா : பீனாராய் : பிரேம்நாத் : ராஜேந்திரநாத் : சங்கர் : ரவி : ராஜ்கபூர்

மேற்கண்ட சினிமா நட்சத்திரங்கள், சினிமா சூரியன், சினிமா சந்திரன் போன்றவர்களின் வீடுகளையும், பணிமனைகளையும் திடீரென்று மடக்கிக்கொண்டு சோதனை போட்டார்களாம்! கணக்கில் வராத ரூபாய் 30 லட்சமாம்! தங்க-வைர நகைகள்! வெளிநாட்டு மதுவகைகள்! இவ்வளவையும் கைப்பற்றியிருக்கிறார்களாமே!

டில்லி அரசாங்கம், நேருவுக்குப் பிறகு, ரொம்ப ரொம்பத் துணிந்துவிட்டது போலத் தெரிகிறதே!

இதென்ன அக்கிரமம்! இப்படியே நாடெங்கும் தொடர்ந்து செய்வதென்றால் என்னவாகும்?

தமிழ்நாட்டு சினிமா நட்சத்திரங்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை, ஒவ்வொரு பெரிய நட்சத்திரமும் பெரிய தலைவர்களில் 5-6 பேரைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது! எத்தனை கோடி ரூபாய், எத்தனை பவுன் கட்டிகள், பதுக்கி வைத்திருந்தாலும் பயமில்லை! அதிகாரிகள், கிட்டே நெருங்கமாட்டார்கள்!

லட்சம் லட்சமாக, கோடி கோடியாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் : பொது நலத் தலைவர்கள், பெரு வியாபாரிகள், தொழிற்சாலை முதலாளிகள், மிகப்பெரிய டாக்டர்கள், பெரிய கான்ட்ராக்டர்களாக, வக்கீல்கள், மதத் தலைவர்கள், பஸ் சொந்தக்காரர்கள், சினிமாக் கொட்டகை உரிமையாளர்கள், பத்திரிகை பிரபுக்கள், நிலப் பிரப்புக்கள், பாங்கர்கள் முதலிய யாவரும் தற்காப்புச் சட்டை (எஃகு அல்ல; கதர்!) அணிந்திருக்கிறார்கள்! அல்லது பதுக்கல் பொருள்கள் மீதும், இரகசியப் பெட்டி கள் மீதும் மூவர்ணக் கொடி போட்டு மூடி வைத்திருக் கிறார்கள்! அல்லது இரகசிய அறைச் சுவர்களில் கடவுள் படங்களை மாட்டி பூஜை அறைகளாக்கியுள்ளார்கள்! அல்லது காங்கிரஸ் ஆதரவுப் பிரசாரம் என்ற திருத் தொண்டினால் தங்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்!

இப்பேர்ப்பட்ட கடவுள் பக்தர்கள் - காங்கிரஸ் பக்தர்களை - டில்லி ஆட்சி விரோதித்துக் கொள்ளுமானால், இத்தனை பேரையும் கம்பி எண்ண வைக்குமானால், நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்குமானால், அடுத்த பொதுத் தேர்தலில் என்ன ஆகும்?

காந்தியார் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியபோது செய்த மாதிரி உண்டியல் பிச்சை எடுத்துத்தானே தேர்தல் நடத்தவேண்டிவரும்? பிரசாரகரின் சிற்றுண்டிச் செலவுக்குக் கூடக் காணாதே, உண்டியல் பணம்?

"இந்தாய்யா! நீ ஏழு லட்சம் அனுப்பி வை!"
"இந்தாப்பா!நீ பத்து லட்சம் தா!''
''ஓய்! உன் மாவட்டத் தேர்தல் செலவை, அது எத் தனை லட்சம் ஆனாலும் சரி, நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். தெரிந்ததா?"

இப்படியெல்லாம் 10-20 புள்ளிகளோடு வேலையை முடிப்பதெப்படி? தெருத்தெருவாக உண்டியல் பிச்சை எடுத்து, ஒவ்வொரு உண்டியலிலும் ரூ. 17-23 காசு சேர்த்து, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடம் கொடுப்பதென்றால் எப்படி?

இப்போதே - வெறும் ஏட்டு சோஷலிசத்துக்கே - காங்கிரஸ் மீது வெறுப்படைந்து மேலே கண்ட பெரும்புள்ளி ஒவ்வொன்றும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று லட்சம் இரகசியமாகக் கொடுத்தால், சுதந்தரா கட்சிக்கு ஏழு லட்சம் இரகசியமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!

இனி, பம்பாயில் செய்த மாதிரி, எல்லாத்துறைத் திமிங்கலங்களையும் பிடிப்பதென்றால், காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகளின் வாழ்த்தும் வாக்கும்தான் கிடைக்குமே தவிர, லட்சம் லட்சமாகப் பணம் கிடைக்காது! (இப்போது பறிமுதல் செய்யப்படும் பணத்தில் இந்தியா முழுவதும் குறைந்த அளவு 10,000 கோடியாவது சேரக் கூடும்!) காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காசு கூடக் கிடைக்காது, அத்தனையும் அரசாங்கத்துக்குப் போய்விடும்!

ஆதலால் மாதிரிக்காக, பூச்சாண்டி காட்டுவதுபோல, பம்பாய் நட்சத்திரங்களோடு நிறுத்திக்கொள்வதே நல்லது! STOP!!

வேண்டாம்! எல்லா மாநிலங்களிலும் இப்படிச் செய்ய வேண்டாம்! பம்பாயில் கூட எல்லாப் பதுக்கல்காரர்களையும் இப்படித் துன்புறுத்தவேண்டாம்! எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சிக்குவதனாலும் இந்த வேலை மட்டும் வேண்டாம்!

வேண்டாம் வீண் தொல்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில், டில்லி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்! பதுக்கல் பெரியவர்களுக்கும் ஒரு வார்த்தை!

இதைக்கண்டு நீங்கள் அஞ்சவேண்டாம்! எல்லோரிடமும் இப்படி நடந்து கொள்ளாது நம் அரசாங்கம்! ஆள்களின் தராதரம்: போட்டிருக்கும் சட்டை: முன்பின் உதவி: இருக்கின்ற தொடர்பு: பெருந்தலைவர்கள் உத்தியோகஸ்தர்கள் நட்பு இத்தனையும் சீர்தூக்கிப் பார்த்துத்தான் நடவடிக்கை அதிகாரிகள் உங்கள் வீட்டுக்குள் நுழைவார்கள்! கள்ளப் பணத்தில் கட்சி கிடையாது! சாதி கிடையாது! மதம் கிடையாது! கொள்கை கிடையாது! கள்ளப் பணக் கும்பல் முழுவதுமே ஒரு தனிக்கட்சியாச்சே!

ஆதலால், ஜெய்ஹிந்த்!
வாழ்க திராவிடம்! வளர்க தமிமுகம்! ஓங்குக ஆத்திகம்!!

அறிவுப்பாதை 28.8.64

No comments:

Post a Comment